1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

இந்தாண்டு உண்டு 'நீட்' தேர்வுக்கு மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும்-அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இந்தாண்டு உண்டு 'நீட்' தேர்வு


''நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும்; அதற்கான பயிற்சி எடுப்பது கடமையாகும். இந்த நிமிடம் வரை, நீட் தேர்வு நடைமுறையில் தான் உள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

நேற்று அவர் அளித்த பேட்டி:எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பி.எஸ்., சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், அவர் மாணவர்களுக்காக கவலைப்பட்டு பேசுகிறாரா அல்லது ஏதோ அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு அறிக்கை விட்டிருக்கிறாரா என்பது தெரியவில்லை.


அறிவிப்பு



அரசு பள்ளிகளில் 'நீட்' தேர்வு பயிற்சி அளிக்கப்பட்டு வருவது, மாணவர்கள் மத்தியில் பெரிய அளவில் குழப்பம் ஏற்படுவதாக அவர் அறிவித்துள்ளார். நீட் தேர்வு வந்ததே, ஓ.பி.எஸ்., துணை முதல்வராக இருந்தபோது தான்.அ.தி.மு.க., ஆட்சியின் போது, பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் தான், அரசு பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு, தற்போது வரை செயல்பட்டு கொண்டிருக்கிறது.எனவே, குழப்பம் அடைய வேண்டிய அவசியம் இல்லை. அ.தி.மு.க., ஆட்சியில் தான், நீட் தேர்வு வந்தது; அதற்கான பயிற்சி வகுப்பும் துவங்கப்பட்டது. தற்போது, தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், நீட் தேர்வுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதற்காக, நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.


கோரிக்கை



இந்நிலையில் தமிழக முதல்வர், பிரதமரை சந்தித்து, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை விடுத்துள்ளார். 2010 டிச., 27ல் தான் மத்திய அரசு, மருத்துவம் மற்றும் அதற்கான மேற்படிப்பில் நுழைவு தேர்வை அறிமுகப்படுத்தி அறிக்கை சமர்ப்பித்தது.கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி, மருத்துவ படிப்பில் சேருவதற்கு, தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவு தேர்வை பரிசீலிக்குமாறு, மத்திய அரசு தமிழகத்தை கேட்டுக் கொண்டது.
அதன்பின், ஜன., 6ம் தேதி கருணாநிதியால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நுழைவு தேர்வுக்கு தடை பெறப்பட்டது. பின், 2017ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில், 'மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என, இரண்டு தீர்மானங்கள் சட்டசபையில் கொண்டு வரப்பட்டன.

இந்த தீர்மானங்கள், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன; அவர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்தார். அவருக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. இந்த நிமிடம் வரை, நீட் தேர்வு நடைமுறையில் தான் உள்ளது. நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டிய சூழல் தான் இருக்கிறது. நீட் தேர்வில் இருந்து, விலக்கு அளிக்க வேண்டும் என்பது தமிழக அரசின் முடிவு. எனவே, நீதிபதி ஏ.கே.ராஜன் அறிக்கை வந்த பின், இதற்கான நடவடிக்கை தொடரும். கொரோனா இறப்புகளை மறைப்பதற்கு எந்த அவசியமும் இல்லை. கொரோனா 3வது அலை வரவே கூடாது. ஏற்கனவே, முதல், 2வது அலையில் மக்கள் பட்ட கஷ்டங்கள் போதும். எனினும் 3வது அலை வந்தாலும் எதிர்கொள்ள அரசு தயராக உள்ளது. அதேபோல, குழந்தைகளுக்கான சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இதுவரை 2,131 பேர், கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதற்கான சிகிச்சை அளிக்க கூடிய 'ஆம்போடெரிசின் - பி' மருந்து, 10 ஆயிரம் அளவில் கையிருப்பில் உள்ளது.இவ்வாறு அமைச்சர் கூறினார்.


latest tamil news





'உண்மையின் பக்கம் தி.மு.க., வந்ததே நல்லது'-



'நீட் தேர்வை இல்லாமல் செய்வோம்' என, தேர்தல் அறிக்கையில் சொன்ன தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின்னும் அதையே சொல்லிக் கொண்டிருந்தது. தற்போது, அதில் முதல் மாற்றமாக, 'இந்தாண்டு, நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்ய, பயிற்சி வகுப்புகள் தொடரும்' என, அறிவித்திருக்கிறது.இது குறித்த, கல்வியாளர்களின் கருத்துக்கள்: பேராசிரியர் சுப்ரமணியன், இணை வேந்தர், விவேகானந்தா யோகா பல்கலை, மைசூரு: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுபடியே நீட் தேர்வுக்கான சட்டத்தை மத்திய அரசு இயற்றி இருக்கிறது என, மிகத் தெளிவாக எல்லாரும் புரிந்து கொள்ள வேண்டும். அதனால், மத்திய அரசு நினைத்தால் கூட நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. நீட் தேர்வை இல்லாமல் செய்வோம் என, யார் சொன்னாலும், அது பொய்யான வாதம் தான்.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில், நீட் இல்லாமல் செய்வோம் என சொல்லி விட்டதாலேயே, ஆட்சிக்கு வந்ததும், அதை நோக்கிய பயணத்திலேயே இருந்தனர்.ஆனால், இப்போது முடியாது என, தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொண்டு விட்டனர். அதையடுத்து தான், 'இந்தாண்டு நீட் தேர்வுக்காக, தமிழக மாணவர்களுக்கு பயிற்சி அளிப்போம்' என, சொல்லி இருக்கின்றனர். டாக்டர் காயத்ரி, பேராசிரியை, சவீதா சட்டக் கல்லுாரி: தி.மு.க., தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வை ரத்து செய்வோம் என சொன்னது, எப்படி என தெரியவில்லை. இப்படி சொல்வதன் மூலம், மருத்துவம் படிக்க விரும்பிய, தமிழ் மாணவர்கள் குழம்பிப் போயினர். நீட் தேர்வு இருக்குமா, இருக்காதா என்று குழப்பத்தில், பல மாணவர்கள் தேர்வுக்கு தயாராகாமல் இருந்து விட்டனர்.
தமிழக அரசு இப்படியொரு முடிவுக்கு வரும் என்பது, சில காலத்துக்கு முன்பே தெரிந்து விட்டது. தி.மு.க., சார்பில் 'டிவி' விவாதங்களில் கலந்து கொண்ட வழக்கறிஞர்கள் பரந்தாமனும், தமிழ் மணியும் பேசிய பேச்சுக்கள், அதை உணர்த்தி விட்டன.

பொய் ரொம்ப நாட்களுக்கு நீடிக்காது என சொல்வர். அப்படித்தான், நீட் தொடர்பான, தி.மு.க.,வின் பொய் வாக்குறுதிகள், சீக்கிரத்திலேயே வெளிச்சத்துக்கு வந்து விட்டன. இனியாவது, இந்த விஷயத்தில் குழப்பாமல் இருப்பது நல்லது.பேராசிரியர்கனகசபாபதி, தமிழக பா.ஜ., துணைத் தலைவர்: தேர்தலில் ஓட்டு பெறும் நோக்கோடு, நீட் தேர்வை ரத்து செய்வோம் என சொல்லி, ஓட்டு வாங்கினர். இப்போது, உண்மை புரிந்து விட்டது. இனியும் மக்களையும், மாணவர்களையும் ஏமாற்ற முடியாது என தெரிந்ததும், சட்டென பின்வாங்குகின்றனர். இந்தாண்டு மாணவர்களை, நீட் தேர்வுக்கு தயாராக பயிற்சி அளிக்கப் போவதாக சொல்கின்றனர். அது, வரவேற்கக் கூடியது தான்.அதே நேரம், இந்தாண்டு மட்டும் தான்; அடுத்தாண்டு இல்லாமல் செய்வோம் என்றெல்லாம் கூறி, மக்களை குழப்பக் கூடாது. நீட் தேர்வை எதிர்கொள்ள, ஒவ்வோர் ஆண்டும் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்போம் என அறிவிக்க வேண்டும்.நீட் தேர்வால், சமூக நீதி மறுப்பதாகச் சொல்லும் வாதமும் பொய். அதையும் தி.மு.க., கைவிட வேண்டும். இப்போதாவது உண்மையின் பக்கம், தி.மு.க., வந்தது, நாட்டுக்கு நல்லது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


'நீட்' தேர்வு விரைவில் முடிவு



'நீட்' மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளை நடத்துவது பற்றி விரைவில் முடிவு செய்யப்படும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.ஐ.ஐ.டி., உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் இன்ஜினியரிங் போன்ற தொழில் கல்வி படிப்பதற்காக, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வும், மருத்துவ படிப்பில் சேருவதற்கு, நீட் நுழைவு தேர்வும் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு முதல், ஜே.இ.இ., நுழைவுத்தேர்வை பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் நடத்த மத்திய கல்வி அமைச்சகம் முடிவு செய்தது. பிப்ரவரி, மார்ச்சில் ஜே.இ.இ., தேர்வுகள் நடந்து முடிந்து விட்டன. கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக மீதியுள்ள இரண்டு கட்ட ஜே.இ.இ., தேர்வுகளும், நீட் தேர்வும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த தேர்வுகளை நடத்துவது பற்றி, மத்திய கல்வி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:நீட் மற்றும் மீதியுள்ள ஜே.இ.இ., தேர்வுகளை ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இது பற்றி முடிவெடுக்கப்படும். தேதி முடிவு செய்யப்பட்டதும், நீட் தேர்வுகான பதிவும் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்

Share:
  • Related Posts:

    No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags