1.1.2021 முதல் 31.12.2021 வரை
நல்ல மாற்றங்கள் இல்லம் தேடி வரும்
(அவிட்டம்,3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் வரை)
(பெயரின் முதல் எழுத்துக்கள்: கு, கூ, கோ, ஸி, ஸீ, ஸே, ஸோ, தா உள்ளவர்களுக்கும்)
கும்ப ராசி நேயர்களே! புத்தாண்டின் தொடக்கம் ஏழரைச் சனியின் தொடக்கமாகவே அமைகின்றது. முதல் கட்டமாக விரயச்சனி இப்பொழுது தொடங்குகின்றது. அதே நேரத்தில் உங்கள் ராசிக்கு தன-லாபாதிபதியான குரு பகவான், விரய ஸ்தானத்திலேயே இருக்கின்றார். எனவே இந்தப் புத்தாண்டில் விரயங்கள் அதிகரிக்கலாம். இருப்பினும் சனி உங்கள் ராசிநாதன் என்பதால் வரவில்லாமல் செலவு ஏற்படுத்த மாட்டார். தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டேயிருக்கும். திடீரென நல்ல மாற்றங் களும் வரலாம். வரும் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு செயல்படுவதன் மூலமே சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள இயலும். பொதுவாக உங்கள் சுய ஜாதக அடிப்படையில், சனி பகவான் வருவது முதல் சுற்றா, இரண்டாவது சுற்றா, மூன்றாவது சுற்றா என்பதை அறிந்து கொள்ளுங்கள். பொங்குசனி காலமாக இருந்தால் தடைகளும், தாமதங்களும் பெரியளவில் ஏற்படாது.
ஆண்டின் தொடக்கத்தில் குருச்சந்திர யோகமும், நீச்சபங்க ராஜயோகமும் ஏற்படுகின்றது. உங்கள் ராசிக்கு 6-க்கு அதிபதியான சந்திரனை குரு பகவான் பார்ப்பதால் நிதிப்பற்றாக்குறை அகலும். ஒரு சிலருக்கு தொழில் மாற்றங்கள் உறுதியாகலாம். ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்து சாதனை நிகழ்த்துவீர்கள்.
புத்தாண்டின் தொடக்க நிலை
வருடத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதனாகவும், விரய ஸ்தானாதிபதியாகவும் விளங்கும் சனி, விரய ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கின்றார். அவரோடு குரு இருப்பது ஒரு வழிக்கு நன்மைதான். சனியின் கடுமை குறைய வழிவகுத்துக்கொடுப்பார். உத்தியோகத்தில் இருந்து விலகக்கூடிய சூழ்நிலை வந்தாலும் புதிய உத்தியோகம் உங்களுக்கு கிடைக்கும். தொழில் மாற்றம் செய்ய விரும்புவோருக்கு அதுவும் தானாக அமையும்.
லாப ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால், அரசுவழி அனு கூலங்கள் கிடைக்கும். தொழிலை விரிவுசெய்ய அல்லது இடமாற்றங்கள் செய்ய பொருளுதவி தேவைப்பட்டால் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வங்கிகளின் ஒத்துழைப்பு மட்டுமல்லாமல், வள்ளல்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்ப ஸ்தானாதிபதி குரு நீச்சம் பெற்றிருப்பதால் குடும்பத்தில் ஒருசில பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். கோபத்தைக் குறைத்துக்கொண்டு பிரச்சினைகளை அணுகு வது நல்லது. ஒரு கடனை அடைக்க மற்றொரு கடனை வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம். செவ்வாய் மூன்றில் இருப்பதால் உடன்பிறப்புகளால் நன்மை உண்டு. என்றாலும், அடிக்கடி அவர்களின் குணங்களில் மாற்றங்கள் ஏற்படும். சுக ஸ்தானத்தில் ராகுவும், 10-ம் இடத்தில் கேதுவும் இருக்கின்றார்கள். எனவே தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. உங்கள் உடல்நலத்திலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
மகர குருவின் சஞ்சாரம்
ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் மகர ராசியில் சஞ்சரிக்கின்றார். அது அவருக்கு நீச்ச வீடாகும். 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. வாக்கு, தனம், குடும்பம், லாபம் ஆகிய ஆதிபத்யங்களைக் கொண்டவராக விளங்கும் குரு பகவான், இப்பொழுது விரய ஸ்தானத்திற்கு வருகின்றார். எனவே எவ்வளவு பணம் கைக்கு கிடைத்தாலும் அடுத்த நிமிடமே செலவாகிவிடும். குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணங்களையும் நிறைவேற்ற செலவு செய்து விடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வரக்கூடிய இடமாற்றத்தில் தாமதம் ஏற்படலாம். நீங்கள் போய் சேருவதற்குள் அங்கு வேறு ஒருவர் நியமிக்கப்படலாம். எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வதோடு, அனுபவஸ்தர்களையும், அருளாளர்களையும் கலந்து ஆலோசித்து செயல்பட்டால் ஓரளவேனும் வெற்றிகள் கிடைக்கும்.
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் குரு விளங்குவதால், பொருளாதாரத்தில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். என்றாலும் முயற்சி அதிகம் தேவைப்படும். வெளிநாடு சென்று பணிபுரிய வேண்டுமென்ற ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாட்டிலிருந்து சொந்த ஊர் திரும்ப முடியாமல் தத்தளிப்பவர்களுக்கு, இப்பொழுது பயணம் அமைவதற்கான வாய்ப்பு கிடைக்கும். இளைய சகோதரத்தோடு இருந்த பகை மாறும். ‘வாகனங்களில் இருந்த பிரச்சினை அதிகரிக்கின்றதே, எப்பொழுது தான் புதிய வாகனம் வாங்கலாம்’என்று சிந்தித்தவர்களுக்கு இப்பொழுது நவீன வாகனங்களை வாங்கி மகிழும் யோகம் உண்டு. செய்யும் தொழிலை விரிவுபடுத்த எடுத்த முயற்சியில் மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
குருவின் பார்வை பலன்கள்
புத்தாண்டில் மகரத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை, உங்கள் ராசிக்கு 4, 6, 8 ஆகிய இடங்களில் பதிவாகின்றது. எனவே குடும்பத்தில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். தாய்வழி ஆதரவு கிடைக்கும். கவனமாகவும், நிதானமாகவும் செயல்பட்டு காரியங்களைச் சிறப்பாக முடிப்பீர்கள். உங்கள் மேற்படிப்பிற்கோ அல்லது உங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களின் கல்வி விருத்திக்காகவோ எடுத்த முயற்சி கைகூடும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. ஒரு சிலருக்கு வீடுகட்டி குடியேறும் யோகம் கூட ஏற்படலாம். ஆரோக்கியத் தொல்லை அகல, மாற்று மருத்துவம் கைகொடுக்கும். எதிரிகள் விலகிச் செல்வர். இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வுடன் கூடிய மாறுதல் கிடைக்கும்.
கும்ப குருவின் சஞ்சார காலத்தில், குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே பூர்வ புண்ணிய ஸ்தானம் பலமடைகின்றது. வாங்கல் - கொடுக்கல்கள் ஒழுங்காகும். தொழிலில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் வளர்ச்சி ஏற்படும். வழக்குகள் சாதகமாக முடியும். கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடுவதில் இருந்த தடைகள் அகலும். உத்தியோகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் சேரும் வாய்ப்பு உண்டு. அடகுவைத்த நகைகளை மீட்டுக் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பங்காளிப் பகை மாறும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.
குருவின் வக்ர காலம்
16.6.2021 முதல் 13.9.2021 வரை, கும்ப ராசியில் குரு வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் பொருளாதாரப் பற்றாக்குறை அதிகரிக்கும். தன-லாபாதிபதி வலுவிழக்கும் பொழுது எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. கூடுதல் விரயங்களைச் சந்திக்க நேரிடும். குடும்பத்தில் பழைய பிரச்சினை மீண்டும் தலைதூக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்பட்டால் அமைதி கிடைக்கும். பயணங்களால் தொல்லை உண்டு. பணிபுரியும் இடத்தில் உங்கள் மேல் திருப்தி ஏற்படாது. புதிய வேலைக்கு முயற்சித்தாலும் அதில் குறுக்கீடுகள் நிறைய இருக்கும். இளைய சகோதரத்தோடு பிணக்குகள் ஏற்படலாம். இல்லம்தேடி வம்பு வழக்குகள் வரும் என்பதால் எதிலும் கொஞ்சம் விழிப்புணர்ச்சியோடு இருப்பது நல்லது.
14.9.2021 முதல் 13.10.2021 வரை, மகர ராசியில் குரு வக்ரம் பெறுகின்றார். விரய ஸ்தானத்தில் வக்ரம் பெறும்பொழுது விரயங்கள் கூடுதலாக இருக்கும். மனச்சஞ்சலங்கள் அதிகரிக்கும். எதையும் திருப்தியாகச் செய்ய இயலாது. தொழில் முன்னேற்றத்தில் எதிரிகளின் குறுக்கீடுகள் அதிகரிக்கும். வெளிநாடு அல்லது வெளிமாநிலம் சென்று பொருள்தேட நினைப்பவர்களுக்கு, இக்காலத்தில் சிக்கல்களும், சிரமங்களும் அதிகரிக்கும். அலுவலகப் பணியில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் மற்றவர்களுக்குப் போய்ச் சேரும். பதவி உயர்வு பற்றிய தகவல் பரிசீலனையில் இருக்குமே தவிர நடைமுறையில் வராது. திட்டமிட்ட காரியங்களை வெகு சிரத்தையுடன் செய்தால் வெற்றி கிடைக்கும்.
சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை, மகரத்தில் சனி வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிநாதன் வக்ரம் பெறும் இந்த நேரம் உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டிய காலமாகும். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். வீண் விரயங்கள் கூடுதலாக இருக்கும். ஒரு காரியத்தை ஒன்றுக்கு இரண்டு முறை செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்படும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்துகொள்ள மாட்டார்கள். நாணயப் பாதிப்புகள் ஏற்படலாம். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய திருப்பம் ஏற்படும். 12-ம் இடத்திற்கு அதிபதியாகவும் சனி விளங்குவதால் இடமாற்றம், ஊர் மாற்றம், உத்தியோக மாற்றம் எளிதில் கிடைக்கும். கடன் சுமை பாதிக்கு மேல் குறையும்.
கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்
14.4.2021 முதல் 3.6.2021 வரை, மற்றும் 4.6.2021 முதல் 21.7.2021 வரை செவ்வாய்-சனி பார்வைக் காலமாகும். இக்காலத்தில் எதைச் செய்தாலும் அனுபவஸ்தர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செய்வது நல்லது. வாய்தாக்களும், வழக்குகளும் வந்துகொண்டே இருக்கும். மதிப்பையும், மரியாதையையும் தக்க வைத்துக்கொள்ள இயலுமா என்பது சந்தேகம்தான். மக்கள் செல்வங்களால் சில பிரச்சினைகள் உருவாகி மனக்கவலையை கொடுக்கும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நலத் தொல்லை வரலாம். அவற்றை ஆரம்பத்திலேயே கவனித்துக்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் தொல்லைகள் உண்டு. குடும்பப் பிரச்சினைகளை மூன்றாம் நபரிடம் சொல்ல வேண்டாம். பொதுவாக பல வேலைகளில் தாமதங்கள் ஏற்படும்.
வளர்ச்சி தரும் வழிபாடு
ஒவ்வொரு புதன்கிழமையும் திருமாலையும், திரு மகளையும் வழிபடுவது நல்லது. இல்லத்தில் விநாயகர் படம் வைத்து, கணபதி கவசம் பாடி வழிபட்டால் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
பெண்களுக்கான பலன்கள்
இந்தப் புத்தாண்டில் சனி விரய ஸ்தானத்தில் இருப்பதால் அதிக விரயங்கள் ஏற்படும். எதைச் செய்தாலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்க விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். தாய்வழி ஆதரவு கிடைக்கும். வீடு, இடம் போன்ற அசையாச் சொத்துக்கள் உங்கள் பெயரில் வாங்கும் யோகம் உண்டு. பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு இடமாற்றங்கள் உறுதியாகலாம். செவ்வாய்- சனி பார்வை காலத்தில் வழிபாடுகள் மூலமே வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள இயலும்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.