1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

மகரம் ஆங்கில புத்தாண்டு 2021 பலன்!



மகரம்  ஆங்கில புத்தாண்டு 2021 பலன்! 



1.1.2021 முதல் 31.12.2021 வரை

நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது

(உத்ராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதம் வரை)

(பெயரின் முதல் எழுத்துக்கள்: போ, ஜ, ஜி, ஜீ, ஜே, ஜோ, க, கா, கி உள்ளவர்களுக்கும்)

மகர ராசி நேயர்களே! ஏழரைச்சனியில் ஜென்மச் சனியின் ஆதிக்கத்தோடு இந்தப் புத்தாண்டு பிறக்கின்றது. ஒரு வழியில் பார்த்தால் உங்கள் ராசிநாதன் சனி, உங்கள் ராசியிலேயே பலம் பெற்று இருக்கிறது என்றும் சொல்லலாம். அதுமட்டுமல்ல, அவரோடு சகாய ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்திற்கு அதிபதியான வியாழனும் இணைந்திருக்கின்றார். இந்தப் புத்தாண்டில் மறக்கமுடியாத சம்பவங்கள் நிறைய நடைபெறப்போகின்றது. உங்களுக்கு முதல் சுற்றாகவோ, மூன்றாவது சுற்றாகவோ, ஏழரைச் சனி நடைபெற்றால் அதில் கவனம் தேவை. இரண்டாவது சுற்றாக விளங்கும் பொங்கு சனி காலமாக இருந்தால் தொழில் முன்னேற்றம், உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு, கடன் சுமை குறையும் வாய்ப்பு ஏற்படும்.

ஆண்டு தொடங்கும் பொழுதே குருச்சந்திர யோகமும், நீச்ச பங்க ராஜயோகமும் ஏற்படுகின்றது. மேலும் குரு நீச்சம் பெறுவது ஒருவழிக்கு நன்மைதான். ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்பதற்கேற்ப இல்லத்தில் சலசலப்பான நிலை மாறி, கலகலப்பான நிலை உருவாகும். சுபச்செய்திகள் வந்து சேரும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைந்து மேம்பாடு அடைய வைப்பர். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கலாம்.

புத்தாண்டின் தொடக்க நிலை

இந்தப் புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பது யோகம்தான். அவரோடு குரு பகவானும் சஞ்சரிக்கின்றார். எனவே ஜென்ம குரு, ஜென்மச்சனி என்றும் எல்லோரும் சொல்வார்கள். இன்னும் ஏழரைச் சனியில் குடும்பச் சனியின் ஆதிக்க காலம் இருக்கின்றது. உங்களைப் பொறுத்தவரை சனி பகவான் நன்மை செய்யும் கிரகமாகவே விளங்குபவர். இருப்பினும் ‘ஆயுள்காரகன்’ என்றும் அவர் அழைக்கப்படுவதால், சிறுசிறு அச்சுறுத்தல்களை ஆரம்பத்தில் கொடுப்பார். குரு போன்ற சுபகிரகங்களின் பார்வை பதியும் பொழுது, உங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும்.

அஷ்டமாதிபதி சூரியன் 12-ல் மறைந்திருப்பது யோகம்தான். ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்பதற்கு ஏற்ப உத்தியோகத்தில் நல்ல மாற்றங்களும், திருப்தி தரும் விதத்தில் ஊதியமும் கிடைக்கும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். வாகன மாற்றங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். லாப ஸ்தானத்தில் சுக்ரன், கேதுவோடு இணைந்திருக்கிறார். எனவே, வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து அதன் மூலம் உதிரி வருமானங்கள் வந்து சேரும். செவ்வாய் பலம் நான்கில் இருப்பதால், இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. பொதுவாக ஜென்மச் சனியின் ஆதிக்கத்தில் வீண் விரயங்கள் ஏற்படாமல் இருக்க இடம் வாங்குவது, வீடு கட்டுவது, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தலாம். ராகு 5-ல் சஞ்சரிப்பதால் பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். சர்ப்பக் கிரகங்களுக்கு மத்தியில் உங்களுக்கு ராசி இருப்பதால் ராகு-கேதுக்களுக்குரிய சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.

மகர குருவின் சஞ்சாரம்

ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசியிலேயே குரு பகவான் சஞ்சரித்து நீச்சம் பெறுகின்றார். அவர் 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவார். அவர் வலிமை இழக்கும் பொழுது மாற்றங்களும், ஏற்றங்களும் வந்து கொண்டே இருக்கும். சகோதரர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்களா? என்பது சந்தேகம் தான். வழக்குகள் எதிர்பாராத விதத்தில் வரலாம். உடன்பிறப்புகள் சொத்து சம்பந்தமான வழக்குகள் போட்டாலும் அது இழுபறி நிலையில்தான் இருக்கும். எதையும் யோசித்துச் செயல்படுங்கள்.

12-ம் இடத்திற்கு அதிபதியாகவும் குரு விளங்குவதால் பயணங்கள் அதிகரிக்கும். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டும். விரயங்களைச் சமாளிக்கும் திறமை உங்களுக்கு உண்டு என்றாலும், வீண் விரயங்களால் மனக்கலக்கமும் உருவாகும். குடும்ப ரகசியங்களை மூன்றாம் நபரிடம் சொல்ல வேண்டாம். கொடுக்கல் - வாங்கல்களில் பாக்கிகள் வசூலாகாமல் போகலாம். வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த தகவல் வருவதில் தாமதம் ஏற்படும். சொத்து விற்பனை முடிவடைந்தாலும் பணம் கைக்கு கிடைப்பது அரிது. பணிபுரியும் இடத்தில் உங்களுக்கு கொடுத்த பொறுப்பை மற்றவர்களிடம் ஒப்படைத்தால், அது முடிவடையாமல் இருப்பது மட்டுமல்ல, உங்கள் மீது வீண் பழிகளும் வந்துவிடும். வாகனப் பழுதுகளால் வாட்டங்களும் அதனால் விரயங்களும் உண்டு.

குருவின் பார்வை பலன்கள்

புத்தாண்டில் மகரத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான், உங்கள் ராசிக்கு 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார். எனவே, அந்த இடங்கள் புனிதமடைந்து உங்களுக்கு நன்மை தரும் விதத்தில் பலன்கள் கிடைக்கும். குறிப்பாக உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தைப் பார்ப்பதால் பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுவடைகின்றது. எனவே தெய்வ பலமும் தன்னம்பிக்கையும் உங்களுக்கு திருப்தியான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் திருப்தி தரும். உங்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பர். கல்யாண வாய்ப்புகள் கைகூடும். கடமையில் இருந்த தொய்வு அகலும். இதுவரை விலகி இருந்த தந்தை வழி உறவினர்கள், உங்களோடு வந்திணைய வாய்ப்பு உண்டு. வீடு வாங்க வேண்டும், இடம் வாங்க வேண்டுமென்று எண்ணியிருந்தால், அந்த எண்ணங்கள் இந்த ஆண்டு நிறைவேறும். ஏழரைச் சனி நடைபெறுவதால் வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு தாமதங்கள் ஏற்படும்.

கும்ப குருவின் சஞ்சார காலத்தில், அதன் பார்வை 6, 8, 10 ஆகிய இடங்களில் பதிவதால் உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். உயர் அதிகாரிகள் உங்கள் அன்பிற்கு பாத்திரமாவர். கேட்ட சலுகைகள் எளிதில் கிடைக்கும். கொடிகட்டிப் பறந்த பிரச்சினைகள் படிப்படியாக மாறும். எதிரிகள் விலகுவர். நிலையான வருமானத்திற்கு வழி அமைத்துக்கொள்வீர்கள். இழப்புகளை ஈடுகட்ட புது வாய்ப்புகளும், ஒப்பந்தங்களும் வந்து சேரும். சங்கிலித் தொடராக வந்த கடன்சுமை இனி பாதிக்கு மேலாகக் குறையும். பெற்றோர்களின் உடல்நலத்தில் மிகுந்த கவனம் தேவை. அவர்களின் மணிவிழா, பிறந்தநாள் விழா, திருமண நாள் போன்றவற்றை சீரோடும், சிறப்போடும் கொண்டாடி சுபவிரயங்களைக் காண்பது நல்லது. இல்லையேல் வீண் விரயங்களும், விமர்சனங்களால் பாதிப்புகளும் ஏற்படும். வீடு மாற்றங்கள் இக்காலத்தில் ஒருசிலருக்கு வரலாம். வீண் விரோதங்களை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.

குருவின் வக்ர காலம்

16.6.2021 முதல் 13.9.2021 வரை கும்ப ராசியில் குரு வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் கொஞ்சம் கவனத்தோடு செயல்பட வேண்டும். சகாய ஸ்தானாதிபதி தன ஸ்தானத்தில் வக்ரம் பெறுவதால் கட்டுக்கடங்காத விரயங்கள் ஏற்படலாம். கடமையை சரிவரச் செய்ய இயலாது. குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும். மனக்கலக்கத்திற்கு மத்தியில் உங்கள் வாழ்க்கை அமையலாம். ‘பணப்புழக்கம் அதிகரிக்க என்ன செய்யலாம்?’ என்று யோசிப்பீர்கள். அதே நேரம் தொழிலிலும் கவனம் செலுத்த இயலாது. உத்தியோகத்திலும் கவனம் செலுத்த இயலாது.

14.9.2021 முதல் 13.10.2021 வரை மகர ராசியில் குரு வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கும் அதிபதியானவர் குரு. எனவே அவர் வக்ரம் பெறுவது நன்மை தான். ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்பதற்கேற்ப இக்காலத்தில் ஒருசில நல்ல பலன்களும் கிடைக்கும். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் மூலம் ஆதாயம் தரும் தகவல்கள் வரலாம். அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கைகூடும். உடன்பிறந்தவர்களின் இல்லங்களில் நடைபெறும் திருமணம் போன்ற சுபகாரியங்களை முன்னின்று நடத்தி வைப்பீர்கள்.

சனியின் வக்ர காலம்

12.5.2021 முதல் 26.9.2021 வரை, மகரத்தில் சனி வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். பணப்புழக்கம் குறையும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்ய இயலாது. நீண்டதூரப் பயணங்களால் விரயம் உண்டு. சேமிப்புகள் கரையலாம். குடும்ப உறுப்பினர்களுக்கு நீங்கள் நன்மை செய்தாலும் அவர்கள் நன்றி காட்ட மாட்டார்கள். கடுமையாக முயற்சித்த காரியங்கள் கூட முடிவடையாமல் போகலாம். வாகனங்களில் செல்லும்பொழுது கவனம் தேவை. பிள்ளைகளாலும், பிறராலும் தொல்லை அதிகரிக்கும். உத்தியோக மாற்றங்கள் உடனுக்குடன் வந்து கொண்டேயிருக்கும்.

கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்

14.4.2021 முதல் 3.6.2021 வரை மற்றும் 4.6.2021 முதல் 21.7.2021 வரை செவ்வாய்-சனி பார்வை காலமாகும். இக்காலத்தில் எதைச் செய்தாலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்ய வேண்டும். இடர்பாடுகள் அதிகரிக்கும். வழக்குகள் வந்து அலைமோதும். இடமாற்றங்கள் இனிமை தராது. உடல் ஆரோக்கியத்திற்காக ஒரு தொகையைச் செலவிடுவீர்கள்.

நீங்கள் அவசரப்பட்டு பேசும் சொற்கள் உங்களுக்கு அவப்பெயரை உண்டாக்கும். புதியவர்களை நம்பி செயல்பட வேண்டாம். பூமி யோகம் ஏற்பட்டாலும் பத்திரப்பதிவில் தடைகள் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் வெறுப்பிற்கு ஆளாக நேரிடும். சகோதர வர்க்கத்தினர்களின் சச்சரவுகளை எதிர் கொள்ளும் சூழ்நிலை உண்டு.

வளர்ச்சி தரும் வழிபாடு

சனி கவசம் பாடி, சனி பகவானை வழிபடுவது நல்லது. ஏகாதசி விரதமிருந்து திருமால்-திருமகள் வழிபாட்டை மேற்கொண்டால் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

பெண்களுக்கான பலன்கள்

இந்தப் புத்தாண்டில் குடும்பச்சுமை கூடும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் இருக்க ஒருவர் மனதை ஒருவர் புரிந்துகொண்டு செயல்படுவது நல்லது. அக்கம், பக்கத்தில் உள்ளவர்களின் பகையை வளர்த்துக் கொள்ளாதீர்கள். தாய் மற்றும் உடன்பிறப்புகளை அனுசரித்துச் செல்வதன் மூலமே ஆதாயம் உண்டு. பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக பிரயாசை எடுப்பீர்கள். விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றங்களும், இட மாற்றங்களும் விருப்பம் போல் வந்து சேரும். பணிபுரியும் பெண்களுக்கு சகப் பணியாளர்களால் தொல்லை உண்டு. வழிபாட்டின் மூலமே வளர்ச்சி காணும் ஆண்டாக இந்த ஆண்டு அமையும்.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags