1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

மிதுனம் ஆங்கில புத்தாண்டு 2021 பலன்!

மிதுனம் ஆங்கில புத்தாண்டு 2021 பலன்! 


1.1.2021 முதல் 31.12.2021 வரை

நல்ல மாற்றங்கள் இல்லம் தேடி வரும்

(மிருகசீர்ஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம், 1, 2, 3 பாதங்கள் வரை) 

(பெயரின் முதல் எழுத்துக்கள்: க, கா, கி, கு, ஞ, ச, கே, கோ உள்ளவர்களுக்கும்)

மிதுன ராசி நேயர்களே! வந்துவிட்டது புத்தாண்டு. வளர்ச்சியிலும் தளர்ச்சியிலும் சிக்கித்தவித்த உங்களுக்கு, இனி மலர்ச்சி கிடைக்கப் போகின்றது. ‘ஆண்டின் தொடக்கத்தில் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் வந்துவிட்டதே’ என்று நீங்கள் கவலைப் பட வேண்டாம். சனியோடு, குரு பகவான் வீற்றிருந்து நற்பலன்களை வழங்குவதற்கு வழிவகுத்துக் கொடுப்பார். பொதுவாகச் சனி தன் சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் பெரியளவில் பாதிப்புகளை உருவாக்க மாட்டார். ஆயினும் தொழில் மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றம் போன்ற மாற்றங்கள் உருவாகும் விதத்தில் தானாகவே மாறுபாடு ஏற்படும்.

குருச்சந்திர யோகத்தோடும், நீச்சபங்க ராஜயோகத்தோடும் இந்த ஆண்டு பிறக்கின்றது. தன ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால், எதிர்பார்க்கும் நேரங்களில் தனவரவு கிடைத்து எப்படியாவது காரியத்தை முடித்துவிடுவீர்கள்.

புத்தாண்டின் தொடக்க நிலை

உங்கள் ராசிநாதன் புதன் அஷ்டமத்தில் மறைந்திருக்கின்றார். ‘மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும்’ என்பார்கள். எனவே தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் வளர்த்துக்கொள்ளுங்கள். சூரிய பலம் ஏழில் இருப்பதால் பொதுவாழ்வில் திடீர் முன்னேற்றங்கள் வரலாம். பிரபலஸ்தர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து பல காரியங்களை முடித்துக்கொடுப்பர். ஆயினும் உங்கள் முன்கோபத்தின் காரணமாக சில நல்ல வாய்ப்புகளை இழக்கவும் நேரிடும். உங்கள் ராசிக்கு பஞ்சம - விரயாதிபதியான சுக்ரன், 6-ம் இடத்தில் சஞ்சரிக்கின்றார். பிள்ளைகளால் விரயம் உண்டு. ‘பிள்ளைகள் நம் சொற்படி கேட்கவில்லையே’ என்று கவலைப்படுவீர்கள். 12-ல் ராகுவும், 6-ல் கேதுவும் இருக்கின்றார்கள். விரய ஸ்்தானத்தில் ராகு இருந்தாலும் பணம் தேவைப்படும் நேரங்களில் வந்து கொண்டே இருக்கும்.

எதிரிகள் ஸ்தானத்தில் கேது இருப்பதால் மறைமுக எதிர்ப்புகள் உருவாகலாம். 6-ம் இடத்திற்கு அதிபதியாக செவ்வாய் விளங்குவதால், ஒருசில உடன்பிறப்புகள் உங்களுக்கு ஆதரவு தராமல் இருக்கலாம். அவர்களை அரவணைத்துச் செல்வதன் மூலம் குடும்ப பிரச்சினைகளுக்கு நல்ல முடிவு காண இயலும். தொழில் ஸ்தானாதிபதியான குரு நீச்சம் பெற்றிருப்பதால், இந்த ஆண்டு முழுவதும் தொழில் வளம் ஏற்ற இறக்கமாகவே இருக்கும்.

மகர குருவின் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு பகவான், இப்பொழுது அஷ்டமத்தில் சஞ்சரிக்கின்றார். அஷ்டமத்தில் சஞ்சரித்தாலும் அவர் பார்வை படும் இடங்கள் எல்லாம் புனிதமடைந்து நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் ராசியைப் பொறுத்தவரை கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற குரு பகவான் நீச்சம் பெற்று சஞ்சரிப்பதால், அஷ்டமத்து குருவால் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்படாது. இருப்பினும் நீங்கள் எதைச் செய்ய நினைத்தாலும் அதை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து செய்தால் நன்மை ஏற்படும். களத்திர ஸ்தானம் எனப்படும் ஏழாமிடத்திற்கு அதிபதியாக குரு பகவான் விளங்குவதால் குடும்பத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவதன் மூலமே ஒற்றுமை பலப்படும். குரு நீச்சம் பெற்றிருப்பதால் பிள்ளைகளையும் உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வதே சிறந்தது.

தொழில் ஸ்தானாதிபதியாக விளங்கும் குரு பகவான் இந்த ஆண்டு நீச்சம் பெறுகின்றார். இருப்பினும் நீச்சம் பெற்ற குரு பகவான், ஆட்சி பெற்ற சனியோடு இணைந்திருப்பதால் ‘நீச்ச பங்க ராஜயோகம்’ ஏற்படுகின்றது. எனவே தடம் மாறிச் சென்ற தொழில், இனி தனவரவைக் கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, வரும் மாற்றங்கள் நல்ல மாற்றங்களாகவே இருக் கும். பணியிட மாற்றங்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்து கொடுக்கும்.

குருவின் பார்வை பலன்கள்

புத்தாண்டில் மகரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 2, 4, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 1, 3, 5 ஆகிய இடங்களில் பதிவாகின்றது. அந்த அடிப்படையில் மகர குருவின் சஞ்சார காலத்தில் விரய ஸ்தானத்திலும், தன ஸ்தானத்திலும் குரு பகவான் பார்வை பதிவதால் விரயத்திற்கேற்ற பணவரவு வந்து கொண்டே இருக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். இல்லம் கட்டும் வாய்ப்பு கைகூடும். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான வழிபிறக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றங்கள் உறுதியாவதோடு எதிர்பார்த்த ஊதியமும் கிடைக்கலாம்.

கும்ப குருவின் சஞ்சார காலத்தில் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவது யோகம்தான். கோடி நன்மை தரும் குருவின் பார்வை என்பதால் உடல் நலம் சீராகும். உள்ளத்தில் உற்சாகம் குடிகொள்ளும். கடமையில் ஏற்பட்ட தொய்வு அகலும். கல்யாண முயற்சிகள் கைகூடும். அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கைகூடலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவோடு உன்னத நிலையைக் காண்பர். வாகனம் வாங்க, வீடு கட்ட, கேட்ட சலுகைகள் கிடைக்கும். சகோதர சச்சரவுகள் அகலும்.

குருவின் வக்ர காலம்

16.6.2021 முதல் 13.9.2021 வரை, கும்ப ராசியில் குரு வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் வாழ்க்கைத் துணை வழியே சில பிரச்சினைகள் வந்து அகலும். நீங்கள் நல்லது செய்ய நினைத்தாலும் அது தீமையாகவே தெரியும். தொழிலில் சில ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும்.

14.9.2021 முதல் 13.10.2021 வரை மகர ராசியில் குரு வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் எதிர்பாராத இழப்புகள் ஏற்படலாம். வளர்ச்சி ஏற்படும் என்று நீங்கள் நினைத்த ஒரு காரியம் விரயத்தை உருவாக்கிவிடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு குறையும். சகப் பணியாளர்களால் உங்கள் முன்னேற்றம் குறையலாம். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையால் பிரச்சினைகள் ஏற்படும். கூட்டாளிகளின் குணமறிந்து நடந்து கொள்ள வேண்டிய நேரம் இது. ஆரோக்கியத்தில் மீண்டும் மீண்டும் அச்சுறுத்தல் தோன்றலாம். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது, கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

சனியின் வக்ர காலம்

12.5.2021 முதல் 26.9.2021 வரை மகரத்தில் சனி வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 8, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். அஷ்டமாதிபதி வக்ரம் பெறுவது நன்மைதான். என்றாலும், 9-ம் இடத்திற்கும் அதிபதியாக அவர் விளங்குவதால் திடீர் திடீரென மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கும். தெய்வீக சிந்தனைகளின் மூலமே அவற்றை நல்ல விதமாக மாற்றிக்கொள்ள இயலும். உடல்நலத் தொல்லை, உடன் இருப்பவர்களால் தொல்லை போன்றவை உருவாகும். உங்கள் முன்னேற்றத்திற்கு உறவினர்களே முட்டுக்கட்டையாக இருக்கலாம். உத்தியோகத்தில் நீண்ட தூரத்திற்கு மாறுதல் வந்து சேரலாம். நிச்சயிக்கப்பட்ட காரியங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். பங்காளிப் பகை அதிகரிக்கலாம். மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்படலாம். இதுபோன்ற காலங்களில் சனி கவசம் பாடிச் சனி பகவனை வழிபடுவது நல்லது.

கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்

14.4.2021 முதல் 3.6.2021 வரை மற்றும் 4.6.2021 முதல் 21.7.2021 வரையான காலகட்டம், செவ்வாய்-சனி பார்வை காலமாகும். இக்காலத்தில் மிகமிக விழிப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டும். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங் களுக்கு அதிபதியானவர் செவ்வாய். 8, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. எனவே அவற்றின்் பார்வை காலத்தில் உத்தியோகத்தில் இருந்து திடீரென விலக நேரிடலாம். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். நிதானமும், பொறுமையும் மிகமிகத் தேவை. எந்தக் காரியத்தையும் முடிவடைவதற்கு முன்னால் வெளியில் சொல்லாதிருப்பது நல்லது. வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த தகவல் தாமதப்படும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் திடீர் பாதிப்புகள் ஏற்படலாம். விரயங் கள் அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்கள் மீது குறை கூறிக்கொண்டே இருப்பர். ‘பிள்ளைகள், படிப்பில் கவனம் செலுத்தவில்லையே’ என்று கவலைப்படுவீர்கள். உதவி செய்த உறவினர்கள் உங்கள் மீது பகை உணர்ச்சி கொள்வர்.

வளர்ச்சி தரும் வழிபாடு

உங்கள் ராசிநாதன் புதன் என்பதால் மகாவிஷ்ணுவை வழிபடுவது நல்லது. அனுகூல நட்சத்திரமன்று, நின்ற கோலத்து பெருமாள் வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.

பெண்களுக்கான பலன்கள்

இந்தப் புத்தாண்டில் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகம் தேவை. வாழ்க்கைத் துணையோடு அனுசரித்துச் செல்வது நல்லது. தாய் மற்றும் சகோதர வர்க்கத்தினர் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்வது சந்தேகம்தான். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. சனி-செவ் வாய் பார்வை காலத்தில் நிதிப்பற்றாக்குறை உருவாகி கடன் வாங்கும் சூழ்நிலையும் உருவாகலாம். பிறரை நம்பி செய்த காரியங்கள் முடிவடையாமல் போகலாம். ஒவ்வாத உணவுகளை உட்கொண்டு உடல்நலக்குறைவு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பணிபுரியும் பெண்கள் தங்கள் பொறுப்பைப் பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம்.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags