1.1.2021 முதல் 31.12.2021 வரை
தொழில் வளம் சிறப்பாக அமையும்
(பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி வரை)
(பெயரின் முதல் எழுத்துக்கள்: தீ, து, ஓ, ஸ்ரீ, தே, தொ, சு உள்ளவர்களுக்கு)
மீன ராசி நேயர்களே! புத்தாண்டு தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில், ராசிநாதன் குருவும், லாப - விரயாதிபதி சனியும் இணைந்திருக்கின்றார்கள். எனவே சென்ற ஆண்டில் ஏற்பட்ட இன்னல்களும், இடர்பாடுகளும் விலகும். தொழிலில் எதிர்பார்த்தபடி லாபம் கிடைக்கும். ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்போடு, வரும் மாற்றங்களை நல்ல மாற்றங்களாக வரவழைத்துக்கொள்வீர்கள். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
குருச்சந்திர யோகம் மற்றும் நீச்சபங்க ராஜயோகம் போன்ற யோகங்கள், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏற்படுகின்றது. உங்கள் ராசிநாதன் குரு நீச்சம் பெற்றாலும் சனியின் சேர்க்கையால் அவர் பங்கம் அடைகின்றார். எனவே எதிர்பாராத நல்ல திருப்பங்கள் வரப்போகின்றது. பொருளாதாரநிலை திருப்தி தரும். அருளாளர்களின் ஆலோசனைகள் அவ்வப்போது கைகொடுக்கும்.
புத்தாண்டின் தொடக்க நிலை
புத்தாண்டின் தொடக்கத்தில் உள்ள கிரக அமைப்பை உங்கள் சுய ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளோடு ஒப்பிட்டுப் பார்த்துப் பலன்களை அறிந்துகொள்ளலாம். சுயஜாதகம் பலம் பெற்றிருந்தால் கோட்சார பலன்களினால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. இருப்பினும் நடைபெறும் திசாபுத்திக்கேற்ற தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து வழிபடும்போது நல்ல பலன்கள் இல்லம் தேடி வரும். ஆண்டின் தொடக்கத்தில் 2-ம் இடத்தில் செவ்வாய் பலம்பெற்றுச் சஞ்சரிக்கின்றார். 2-ம் இடம் என்பது தனம், வாக்கு, குடும்பம் ஆகியவற்றைக் குறிப்பதாகும். அங்கு ஆட்சி பெற்று விளங்கும் செவ்வாய் இருப்பதால், குடும்ப முன்னேற்றம் கூடும். அதிகார வர்க்கத்தினர்களின் ஆதரவோடு தொழில் வளத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள்.
பாம்பு கிரகமான ராகு-கேதுக்களுக்கு நடுவில் உங்களுக்கு ராசி இருப்பதால் சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை முறையாக செய்துகொள்வது நல்லது. வழக்குகளில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். அரசியல் துறையைச் சார்ந்தவர்களுக்கு ஆதரவு அதிகரிக்கும். கூடுதல் பொறுப்பும் பதவியும் தேடி வரும்.
9-ல் கேது இருப்பதால் தந்தைவழி உறவில் பிரச்சினைகள் உருவாகலாம். முன்னோர்கள் கட்டி வைத்த ஆலயத் திருப்பணிகளை முறையாக செய்ய முன்வருவீர்கள். தொழில் தொடங்கும் முயற்சியில் புதிய கூட்டாளிகள் வந்திணையலாம். பத்தாமிடத்தில் சூரியன் இருப்பதால் ‘தொழிலை விரிவு செய்ய போதுமான தொகை இல்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு, அரசு வழியில் ஒத்துழைப்பு கிடைக்கலாம். லாப ஸ்தானத்தில் புதன், சனி, குரு ஆகிய மூன்று கிரகங்களும் இருக்கின்றன. இந்தக் கூட்டுக்கிரக யோகம் உங்களுக்குச் சாதகமாக அமைந்து வழிகாட்டும். குறிப்பாக மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். சென்ற ஆண்டில் முடங்கிப்போன தொழில் இப்பொழுது மீண்டும் தலைதூக்கும்.
மகர குருவின் சஞ்சாரம்
ஆண்டின் தொடக்கத்தில் மகர ராசியில் உங்கள் ராசிநாதன் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். அங்கு குரு நீச்சம் பெறுவதால் நன்மைகளும் கிடைக்கும். பொதுவாக கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் நீச்சம் பெறுவது யோகம்தான். ராசி நாதனாகவும், 10-க்கு அதிபதியாகவும் விளங்கும் குரு, 11-ம் இடத்தில் வலிமை இழப்பதால் எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும். பிள்ளைகளை நெறிப்படுத்தி வல்லவர்களாக மாற்றும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். கூட்டு முயற்சியில் இருந்து தனித்து இயங்க முற்படுவீர்கள். வளைகாப்பு, நிச்சயதார்த்தம், திருமணம், சஷ்டியப்த பூர்த்தி என்று பல நல்ல நிகழ்வுகள் நடை பெறுவதற்காக செலவிடுவீர்கள்.
உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திற்கு அதிபதியான குரு, 11-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது, விட்டுப்போன ஒப்பந்தங்கள் மீண்டும் வரலாம். பணியாளர்களை மாற்றும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். ஆதாயம் தரும் தகவல் வெளிநாட்டில் இருந்து வரலாம். பாகப்பிரிவினைகளில் இருந்த தடை அகலும். தேகநலனில் அக்கறை காட்டுவது நல்லது. திடீர் பிரச்சினைகளால் சிலருக்கு கவலை அதிகரிக்கும். பணியாற்றும் இடத்தை விட சொந்த ஊரில் இடம் வாங்கி வீடுகட்ட வேண்டுமென்ற ஆசை நிறைவேறும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் பழக்கம் ஏற்படும். தனியார் துறையிலிருந்து அரசு வேலைக்கு மாறிக்கொள்ள முயற்சி எடுத்தவர்களுக்கு, இப்பொழுது நல்ல நேரம் வந்துவிட்டது. தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும்.
குருவின் பார்வை பலன்கள்
புத்தாண்டில் லாப ஸ்தானமான மகரத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை, உங்கள் ராசிக்கு 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே அந்த இடங்கள் புனிதமடைந்து நல்ல பலன்களை அள்ளி வழங்கும். குறிப்பாக இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். சொல்லை செயலாக்கிக் காட்டுவீர்கள். துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். பிள்ளைகளை நெறிப்படுத்தும் முயற்சிகளில் புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த தகராறுகள் அகலும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடிந்தது என்று பலரிடம் சொல்லி மகிழ்வீர்கள். தேக நலனும் சீராகும். செல்வ நிலையும் உயரும். வெளிநாட்டில் இருந்து நீங்கள் எதிர்பார்த்த தகவல் அனுகூலமானதாக இருக்கும். ‘வந்த பணம் அனைத்தும் வட்டி கட்டியே செலவாகிவிட்டதே. இனியேனும் சேமிக்க முடியுமா?’ என்று நினைத்தவர்களுக்கு, நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். எனவே கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.
கும்ப குருவின் சஞ்சார காலத்தில் குருவின் பார்வை, உங்கள் ராசிக்கு 4, 6, 8 ஆகிய இடத்தில் பதிவாகின்றது. எனவே அந்த இடங்கள் எல்லாம் புனிதமடைந்து உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும். குறிப்பாகத் தாய்வழி ஆதரவு கிடைக்கும். தன்னிச்சையாக இயங்க முன்வருவீர்கள். ‘பழைய வாகனங்கள் அடிக்கடி பழுதாகி செலவு வைக்கின்றதே.. அதைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்கள் வாங்கலாமா?’ என்று சிந்தித்தவர்களுக்கு, அதற்கான சூழல் உருவாகும். இழப்புகளை ஈடுசெய்யப் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும்.
குருவின் வக்ர காலம்
16.6.2021 முதல் 13.9.2021 வரை, கும்ப ராசியில் குரு வக்ரம் பெறுகின்றார். அது அவ்வளவு நல்லதல்ல. தொழில் ஸ்தானாதிபதியாகவும், ராசிநாதனாகவும் விளங்கும் குருபகவான் விரய ஸ்தானத்தில் வரும்பொழுது, தொழில் மாற்றச் சிந்தனைகள் மேலோங்கும். தொல்லை தரும் எதிரிகளின் பலம் கூடும். விரயங்கள் அதிகரிக்கும். சங்கிலித் தொடர்போல கடன்சுமை வரலாம். நம்பிக்கைக்குரிய நண்பர்களைப் பார்க்க இயலாது. நடக்கும் செயல்கள் அனைத்தும் நன்மைக்கே என்று நினைத்து அமைதி காண வேண்டிய நேரம் இது. நிச்சயித்த காரியங்களில் மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இனிமை தராத இடமாற்றங்கள் வரலாம். உறவினர் பகை அதிகரிக்கும்.
14.9.2021 முதல் 13.10.2021 வரை, மகர ராசியில் குரு வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் ஆதரவு குறையும். சகோதரர்கள் பிரச்சினைகளுக்கு அடித்தளமிடுவர். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது. பிள்ளைகளால் சில பிரச்சினைகள் வந்து அகலும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. வெளிநாட்டு முயற்சிகளில் விழிப்புணர்ச்சி தேவை. உங்களோடு தோள் கொடுத்து உதவிய பணியாளர்கள் விலக நேரிடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊர் மாற்றங்கள் உருவாகி மனக்கலக்கத்தை ஏற்படுத்தும்.
சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை, மகரத்தில் சனி வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 11, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். அதாவது லாப ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்திற்கு அதிபதி. விரயாதிபதியாக விளங்குபவர் வக்ரம் பெறுவது நன்மைதான். ஆனால் லாபாதிபதியாகவும் அவர் விளங்குவதால் சனி வக்ரம் பெறும் பொழுது பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். உறவினர்கள் பகை உருவாகும். அரசு வழிப் பிரச்சினைகளும் ஏற்படும். ‘வங்கி சேமிப்பு கரைகிறதே’ என்று கவலைப்படுவீர்கள். வீடு மாற்றச் சிந்தனைகளும், ஊர் மாற்றச் சிந்தனைகளும் உருவாகும். ‘கொடுத்த பணம் வசூலாகவில்லையே’ என்று கவலைப்படுவீர்கள்.
கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்
14.4.2021 முதல் 3.6.2021 வரை, மற்றும் 4.6.2021 முதல் 21.7.2021 வரை செவ்வாய்-சனி பார்வை காலமாகும். இக்காலத்தில் எதையும் யோசித்துச் செய்வது நல்லது. உறவினர்களுக்கு நீங்கள் நன்மை செய்தாலும், அது தீமையாகவே தெரியும். குடும்பத்தில் நிம்மதி குறையலாம். கொடுக்கல் -வாங்கல்களில் ஏமாற்றம் உண்டு. பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு வீண் பழிகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு பெரும் தொகை செலவு செய்வீர்கள். வருமானப் பற்றாக்குறை அதிகரிக்கும். கோபத்தைக் குறைத்துக்கொண்டு செயல்படுங்கள். சொத்துக்களால் பிரச்சினைகள் வரலாம். சொந்தங்களின் அரவணைப்பு குறையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சலுகைகள் மறுக்கப்படலாம். சக ஊழியர்களால் தொல்லை உருவாகலாம்.
வளர்ச்சி தரும் வழிபாடு
இந்தப் புத்தாண்டில் எல்லா நாட்களும் குரு பகவானை வழிபடுவது நல்லது. இல்லத்தில் தென்முகக் கடவுள் படம் வைத்து, குரு கவசம் பாடி வழிபட்டால், நல்ல தகவல்கள் வந்து சேரும்.
பெண்களுக்கான பலன்கள்
இந்தப் புத்தாண்டு உங்களுக்கு சிறப்பான ஆண்டாக அமையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு வாங்கும் முயற்சி வெற்றி தரும். கணவன்-மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. உறவினர்களின் மனக்கசப்பு மாறும். தாய்வழி ஆதரவு திருப்தி தரும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். பிள்ளைகள் வழியில் பெருமையான தகவல் வரலாம். பணிபுரியும் பெண்களுக்கு ஊதிய உயர்வும், உத்தியோக உயர்வும் உண்டு. வேலையில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களுக்கு, பழைய இடத்திலேயே பணிபுரிய அழைப்புகள் வரலாம். சனி-செவ்வாய் பார்வை காலத்தில் மிகுந்த கவனம் தேவை.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.