1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

தனுசு ஆங்கில புத்தாண்டு 2021 பலன்!

தனுசு  ஆங்கில புத்தாண்டு 2021 பலன்! 


1.1.2021 முதல் 31.12.2021 வரை

நினைத்த காரியம் நிறைவேறும்

(மூலம், பூராடம், உத்ராடம் 1-ம் பாதம் வரை)

(பெயரின் முதல் எழுத்துக்கள்: யே, யோ, ப, பி, பு, பூ, பா, ன, டே, பே உள்ளவர்களுக்கு)

தனுசு ராசி நேயர்களே! விடாமுயற்சிக்கு வெற்றி கிடைக்கும் ஆண்டாக, இந்த புத்தாண்டு அமையப்போகின்றது. ஜென்மச் சனியும், ஜென்ம குருவும் விலகிவிட்டது. இனி நன்மைகள் ஒவ்வொன்றாக நடைபெறப்போகின்றது. இதுவரை ஏழரைச் சனியில் ஜென்மச் சனியின் பிடியில் சிக்கி மனஅமைதி குறைவோடு வாழ்ந்த உங்களுக்கு, இப்பொழுது குடும்பச்சனி தொடங்கி விட்டதால் குதூகலங்கள் அதிகரிக்கும். முயற்சியில் வெற்றி கிடைக்கும். மூடிக்கிடந்த தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பால், தொழில் வளர்ச்சி அடைவீர்கள். வீண் பழிகளில் இருந்து விடுபடுவீர்கள். வெளிவட்டாரப் பழக்க வழக்கத்தால் நன்மைகள் வந்து சேரும். 2-ல் சஞ்சரிக்கும் குரு பகவான் அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் சந்திரனைப் பார்ப்பதால், சந்திராஷ்டமத்தோடு ஆண்டு தொடங்குகிறது. இருப்பினும் குருவின் பார்வை நல்ல வாய்ப்புகளை வரவழைத்துக் கொடுக்கும்.

குருச்சந்திர யோகத்தோடு தொடங்கும் இந்த ஆண்டில், நீச்சம் பெற்ற குருவோடு ஆட்சி பெற்ற சனி சேர்ந்து நீச்சபங்க ராஜயோகத்தை உருவாக்குகிறார். எனவே குடும்பத்தில் பிரச்சினைகள் வந்தாலும், அதை சமாளிக்கும் ஆற்றல் உண்டு. புதிய திருப்பங்களைத் தரும் ஆண்டாக இந்த ஆண்டு அமையும்.

புத்தாண்டின் தொடக்க நிலை

பொதுவாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசியிலேயே சூரியன் சஞ்சரிக்கின்றார். பிரகாசமான எதிர்காலம் உண்டு. பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், அதிகாரப் பதவிகளும் கிடைக்கலாம்.

வாக்கு ஸ்தானத்தில் சனி பகவான் ஆட்சி பெறுகின்றார். எனவே வாக்கு வலிமை அதிகரிக்கும். மக்கள் செல்வாக்கு மேலோங்கும். சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். அவரோடு குரு, புதன் ஆகிய இரண்டு கிரகங்கள் இணைந்திருப்பது யோகம்தான். வாழ்க்கைத் துணையின் உடல்நலம் சீராகும். வாரிசுகளால் வந்த தொல்லை அகலும். கடந்த காலத்தில் ஏற்பட்ட வழக்குகள் சாதகமாக முடியும். வழிபாட்டில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் திறமைக்கேற்ற பொறுப்புகளை காண்பர். மேலதிகாரிகளின் ஆதரவோடு நினைத்த இடத்திற்கு மாறுதல் பெறும் யோகம் கூட உண்டு. திட்டமிட்ட காரியங்களைத் திறம்படச் செய்து முடிப்பீர்கள். மாமன், மைத்துனர் வழியில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும்.

பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் பலம் பெற்றிருப்பதால், பிள்ளைகளால் பெருமை சேரும். அவர்களின் எதிர்கால நலன்கருதி நீங்கள் செய்ய நினைத்த முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும். 12-ல் கேதுவும், 6-ல் ராகுவும் சஞ்சரிக்கின்றார்கள். கேதுவோடு சுக்ரனும் இணைந்திருக்கிறார். சர்ப்பக் கிரகத்தின் ஆதிக்கம் கூடுதலாக இருப்பதால், சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை செய்து கொள்வது நல்லது.

மகர குருவின் சஞ்சாரம்

ஆண்டின் தொடக்கத்தில் மகர ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். குரு பகவான் உங்கள் ராசிக்கும், 4-ம் இடத்திற்கும் அதிபதியாவார். அவர் வலிமை இழக்கும் பொழுது மிகுந்த நன்மைகளை உங்களுக்குச் செய்வார். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் நீச்சம் பெறுவது யோகம்தான். எனவே இதுவரை உங்கள் உடல்நலத்திலோ, உடன் இருப்பவர்களின் உடல்நலத்திலோ திடீர் தாக்குதல்கள் ஏற்பட்டு ரண சிகிச்சை செய்ய வேண்டுமென்று சொன்ன மருத்துவர்கள், இப்பொழுது சாதாரண சிகிச்சையிலேயே குணமாக்கி விடுவதாகச் சொல்வார்கள். சோதனைக் காலம் முடிந்து, இனி சாதனைக் காலம் வரப்போகிறது.

4-ம் இடத்திற்கு அதிபதியாக குரு பகவான் விளங்குவதால், தாயின் உடல்நலத்தில் கொஞ்சம் கவனம் தேவை. வாகனங்களை மாற்ற வேண்டுமென்று பலமாதங்களாக சிந்தித்தவர்களுக்கு, இப்பொழுது அதற்கான வாய்ப்பு உருவாகும். கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். உங்கள் பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமாக முயற்சி செய்து சென்ற ஆண்டில் தாமதம் ஏற்பட்டவர்கள், இந்த ஆண்டு எதிர்பார்த்த இலக்கை அடைவர். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்பட்டாலும் சேமிக்க இயலுமா? என்பது சந்தேகம்தான். சுக ஸ்தானாதிபதி நீச்சம் பெற்றிருப்பதால் தவிர்க்க முடியாத விதத்தில் மருத்துவச் செலவு ஏற்படும். பணிபுரியும் இடத்தில் சகப் பணியாளர்களை அனுசரித்துச் செல்லுங்கள்.

குருவின் பார்வை பலன்கள்

புத்தாண்டில் மகரத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான், உங்கள் ராசிக்கு 6, 8, 10 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார். குருவின் பார்வை பதியும் இடங்கள் புனிதமடைந்து நன்மைகளை உங்களுக்கு வழங்கும் என்பது நியதி. எனவே எதிரிகள் விலகி இனிய பலன் கிடைக்கும். உதிரி வருமானங்கள் உண்டு. அதிரடியாக சில முடிவுகளை எடுத்து அருகில் உள்ளவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். நீண்ட நாள் கனவு நனவாகும். தொழிலில் சென்ற வருடம் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட, புதிய பாதையில் பயணிப்பீர்கள். சட்டத்துறை வல்லுநர்கள் உங்களுக்குச் சரியான பாதையை வகுத்துக் கொடுப்பர். எல்லாவற்றிலும் ஏறுமுகமாக அமையப் போகின்றது.

கும்ப குருவின் சஞ்சார காலத்தில், அதன் பார்வை உங்கள் ராசிக்கு 7, 9, 11 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே இல்லம் தேடி சுபச் செய்திகள் வந்து சேரும். மங்கல ஓசை மனையில் கேட்கும். அதுமட்டுமல்லாமல் மழலையின் ஓசையும் கேட்கும். தங்கு தடைகள் தானாக விலகும். தடம்புரண்டு சென்ற உறவினர்கள், இப்பொழுது தானாக வந்திணைவர். தந்தை வழி ஆதரவு திருப்தி தரும். பூர்வீகச் சொத்துக்களில் ஒரு பகுதியை விற்றுவிட்டுப் புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். கூட்டாளிகளை விலக்கிவிட்டு தனித்து இயங்க முற்படுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இதுவரை இருந்த மனக்குழப்பம் அகலும். ‘இங்கேயே நீடிக்கலாமா? அல்லது வேறு இடத்திற்கு செல்லலாமா?’ என்று யோசித்தவர்களுக்கு இப்பொழுது விடை கிடைக்கும்.

குருவின் வக்ர காலம்

16.6.2021 முதல் 13.9.2021 வரை, கும்ப ராசியில் குரு வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிநாதன் 3-ம் இடத்தில் வக்ரம் பெறுகின்ற இந்த நேரத்தில், உடன்பிறப்புகளின் குணத்தில் மாறுதல்கள் ஏற்படும். பண நெருக்கடி அதிகரிக்கலாம். வழக்குகளில் திடீர் மாற்றங்கள்் ஏற்படும். சில காரியங்களை, பெரும் முயற்சி எடுத்து முடிக்க வேண்டிய சூழல் உருவாகும். உடன்பிறப்புகளால் மன அமைதி குறையலாம். ஒரு சிலர் ‘தொழில் செய்யும் இடத்தை மாற்றலாமா?’ என்று யோசிப்பீர்கள். உறவினர்களின் பேச்சு, உங்களை மனச் சங்கடத்தில் ஆழ்த்தும். சில பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுக்கலாம். அனுபவஸ்தர்களின் ஆலோசனைகளும், அருளாளர்களின் கருத்துக்களும் உங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டும். விரயங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகப்பணியாளர்களால் தொல்லை வந்து சேரும். சகோதர வழியில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சிகளை முன்னிட்டு ஒருதொகை கொடுத்து உதவி செய்யும் சூழ்நிலை உருவாகும்.

14.9.2021 முதல் 13.10.2021 வரை, மகர ராசியில் குரு வக்ரம் பெறுகின்றார். இதன் விளைவாக குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்படும். பண வரவில் தாமதம் உண்டு. பக்கத்தில் உள்ளவர்களிடம் கடன் வாங்க நேரிடும். பிள்ளைகள் உங்கள் சொற்களைக் கேட்டு நடப்பது சந்தேகம்தான். அருகில் உள்ள அனைவரிடமும் அனுசரித்துச் சென்றால் தான், ஆதாயம் கிடைக்கும். பயணங்களைத் தள்ளி வைப்பீர்கள்.

சனியின் வக்ர காலம்

12.5.2021 முதல் 26.9.2021 வரை, மகரத்தில் சனி வக்ரம் பெறுகின்றார். இந்த காலகட்டத்தில் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. கொள்கைப் பிடிப்புடன் செயல்படவும் முடியாது. பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். இருப்பினும் சனி உங்களுக்கு யோகம் செய்யும் கிரகம் என்பதால், முடிவில் காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். நிதிநிலை குறைந்தாலும் தேவைக்கேற்ப பணம் வந்துகொண்டே இருக்கும். இதுபோன்ற நேரங்களில் மனத் தெளிவுதான் தேவை. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பணியாளர்களால் தொல்லை ஏற்பட வாய்ப்புண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திருப்தியற்ற தன்மை உருவாகும். சகப்பணியாளர்களால் பிரச்சினைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

செவ்வாய் - சனி பார்வைக் காலம்

14.4.2021 முதல் 3.6.2021 வரை மிதுன ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், மகர ராசியில் சஞ்சரிக்கும் சனியைப் பார்க்கின்றார். அதே சமயம் கும்பத்தில் சஞ்சரிக்கும் குரு செவ்வாயை பார்த்துப் புனிதப்படுத்துகின்றார். 4.6.2021 முதல் 21.7.2021 வரை கடகத்தில் சஞ்சரிக்கும் நீச்சம்பெற்ற செவ்வாய், மகரத்தில் சஞ்சரிக்கும் சனியை சப்தமப் பார்வையாக பார்க்கின்றார். இதன் விளைவாக எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படப்போகின்றது. உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சனியைப் பார்க்கும் பொழுது, பிள்ளைகளால் சில பிரச்சினைகள் ஏற்படும். கல்யாண வாய்ப்புகள் கைநழுவிச் செல்லலாம். பூர்வீக சொத்துக்களைப் பிரித்துக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டாலும் பாகப்பிரிவினைகள் திருப்தியாக அமையாது. இடமாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை எதிர்பாராத விதத்தில் அமையும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வீடு கட்டும் முயற்சி அல்லது வாங்கும் முயற்சி வெற்றியாகும்.

பெண்களுக்கான பலன்கள்

இந்தப் புத்தாண்டு உங்களுக்கு பொருளாதார விருத்தியை அதிகரிக்கும் ஆண்டாக அமையப் போகிறது. ஜென்மச் சனி விலகியதால் நன்மைகள் அதிகம் நடைபெறும். கணவன்-மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். தாயின் ஆதரவு உண்டு. உடன்பிறந்தவர்களில் ஒருசிலர் மட்டும் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு. குறிப்பாக பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகள் மற்றும் திருமணங்கள் நிறைவேறி நிம்மதியைக் கொடுக்கும். பணிபுரியும் பெண்களுக்கு யோகமான நேரம் இது. மேலிடத்தின் ஆதரவோடு முன்னேற்றம் காண்பீர்கள். மனப்பயம் விலகும். மாருதி வழிபாடு மகிழ்ச்சியை வழங்கும்.

வளர்ச்சி தரும் வழிபாடு

வியாழக்கிழமை தோறும் குரு வழிபாட்டை மேற்கொள்வதோடு, இல்லத்துப் பூஜை அறையில் கண்ணன் - ராதை படம் வைத்து கண்ணன் கவசம் படித்து வழிபடுவது நல்லது.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags