1.1.2021 முதல் 31.12.2021 வரை
எதிர்பார்ப்புகள் நிறைவேறும்
(கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீர்ஷம் 1, 2 பாதங்கள் வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்: இ, உ, ஏ, ஓ, வ, வி, வு, வே, வோ உள்ளவர்களுக்கு)
ரிஷப ராசி நேயர்களே!
வந்துவிட்டது புத்தாண்டு. தளர்ச்சியில் இருந்த உங்களுக்கு, இனி வளர்ச்சி வரப்போகின்றது. ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன், சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியையே பார்க்கின்றார். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு பகை கிரகமாக விளங்கும் குரு பகவான் நீச்சம் பெற்று உங்கள் ராசியையே பார்க்கின்றார். அந்த அடிப்படையில் ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்பதால் 2021 உங்களுக்கு இனிய பலன்களை ஏராளமாக வழங்கப் போகின்றது. பொதுவாகப் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். ஸ்தம்பித்து நின்ற தொழில் இனி தானாக நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும். குடும்பத்தில் சந்தோஷ வாய்ப்புகளை அதிகம் சந்திக்கப் போகின்றீர்கள்.
குருச்சந்திர யோகத்தோடும், நீச்ச பங்க ராஜயோகத்தோடும், இந்த ஆண்டின் தொடக்கம் அமைகின்றது. உங்களுக்கு யோகம் செய்யும் சனி இப்பொழுது அஷ்டமத்தில் இருந்து 9-ம் இடத்திற்கு வந்து விட்டது. எனவே தொட்டது துலங்கும். தொழில் வளம் சிறக்கும். இஷ்ட தெய்வங்களுக்கும், குலதெய்வங்களுக்கும் நீங்கள் செய்ய நினைத்த பிரார்த்தனைகளை இப்பொழுது செய்து முடித்து மகிழ்ச்சி காண்பீர்கள்.
புத்தாண்டின் தொடக்க நிலை
புத்தாண்டின் தொடக்கத்தில் கிரகங்கள் எந்தெந்த இடங்களில் பலம் பெற்று இருக்கின்றன. எந்தெந்த கிரகங்கள் பலம் குறைவாக இருக்கின்றன என்பதை நாம் எடை போட்டுப் பார்த்தே வருட பலன்களை அறிந்து கொள்ள இயலும். சுயஜாதகம் பலம் பெற்றிருந்தால் கோட்சார பலன்களின் குறுக்கீடு எதுவும் செய்யாது. திசாபுத்தி பலம் இழந்தவர்களுக்கு திடீர் மாற்றங்கள், மனக்கசப்புகள் தரும் விதத்தில் அமையலாம் என்பதால், யோகபலம் பெற்ற நாளில் அதற்குரிய வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.
அந்த அடிப்படையில் உங்கள் ராசியில் ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் இருப்பதால், சர்ப்பக் கிரகத்தின் ஆதிக்கம் கூடுதலாகவே இருக்கின்றது. எனவே பொருளாதாரத்தில் நிறைவு ஏற்பட்டாலும், மனநிறைவு குறைவாகவே இருக்கும். கோபத்தைக் குறைத்துக்கொள்வதன் மூலமும், குணமோடு நடந்து கொள்வதன் மூலமும் குடும்பத்தில் ஒற்றுமையை பலப்படுத்திக் கொள்ளலாம். சப்தம ஸ்தானத்தில் கேது இருப்பதால் சஞ்சலங்கள் அதிகரிக்கும். சில காரியங்கள் நடைபெறுவது போல் இருந்து கடைசி நேரத்தில் கைநழுவிச் செல்லலாம். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கலாம். சகப் பணியாளர் ஒருவர் இடமாற்றம் செய்யப்படுவதை முன்னிட்டோ அல்லது அவர் விலகுவதை முன்னிட்டோ அவருடைய வேலையும் உங்களிடம் ஒப்படைக்கப்படலாம். உயர் அதிகாரிகள் மனம் கோணாமல் இருக்க, நீங்கள் பெரும்பிரயாசை எடுக்க வேண்டியதிருக்கும். அஷ்டமத்தில் சூரியன் இருப்பதால் அரசாங்க பிரச்சினை தலைதூக்கும். அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆண்டின் மையப்பகுதியில் அது கைகூடலாம். ஒன்பதாமிடத்தில் குரு, சனி, புதன் ஆகிய மூன்று கிரகங்களும் இணைந்து சஞ்சரிக்கின்றன. அந்த மூன்று கிரகங்களின் மீதும் சந்திரனின் பார்வை பதிகின்றது. எனவே குருச்சந்திர யோகம், சனி சந்திர யோகம் ஆகிய யோகங்கள் வந்து சேருகின்றன. எனவே கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். குடும்பத்தில் மங்கல ஓசையும், மழலையின் ஓசையும் கேட்கும் சூழல் உண்டு.
மகர குருவின் சஞ்சாரம்
ஆண்டின் தொடக்கத்தில் மகர ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான், உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் இருப்பதால் பிதுர்ரார்ஜித ஸ்தானம் புனிதமடைகின்றது. அவர் நீச்சம் பெற்றிருப்பது ஒருவழிக்கு நன்மைதான். உங்கள் ராசிக்கு 8, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், குரு பகவான். எனவே அஷ்டமாதிபதி நீச்சம் பெறும்பொழுது ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்பதற்கேற்ப எதிர்பாராத சில நல்ல மாற்றங்களை குரு பகவான் வழங்கலாம். திட்டமிடாது நீங்கள் செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். திடீர் தனவரவு திக்குமுக்காட வைக்கும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர்.
லாப ஸ்தானத்திற்கு அதிபதியாக குரு விளங்குவதால் அவர் நீச்சம் பெற்றாலும் கூட, போதுமான அளவிற்கு பொருளாதாரம் வந்து சேரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது அவற்றைப் படித்துப்பார்த்துக் கையெழுத்திடுவது நல்லது. வெளிநாட்டில் இருந்து ஒருசிலருக்கு அழைப்புகள் வரலாம். சுயஜாதகத்தை ஆராய்ந்து பார்த்து முடிவெடுத்துக் கொள்வது நல்லது. பங்குச்சந்தையில் ஈடுபட்டிருப்பவர்கள் கவனத் துடன் செயல்படுவது நல்லது. புதியவர்களை நம்பி அகலக்கால் வைக்க வேண்டாம். எதையும் திட்டமிட்டுச் செய்வதன் மூலமே வெற்றிப் பாதையை அமைத்துக்கொள்ள இயலும்.
குருவின் பார்வை பலன்கள்
புத்தாண்டில் மகரத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் உங்கள் ராசியையும், உங்கள் ராசிக்கு 3, 5 ஆகிய இடங்களையும் பார்க்கின்றார். எனவே ஆண்டின் தொடக்கத்தில் உடல்நலம் சீராகவே இருக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். பணி ஓய்விற்கு பிறகும் கூட உங்களுக்கு மீண்டும் பணிபுரியும் அமைப்பு வரலாம். அடகு வைத்த நகைகளை மீட்டுக் கொண்டு வரும் வாய்ப்பு கிட்டும். அரசியல்வாதிகளும், அதிகார பதவியில் உள்ளவர்களும் உங்களுக்கு நட்பாகி நல்ல காரியங்கள் பலவற்றையும் முடித்துக்கொடுப்பர். சகோதரர்களின் பாசம் அதிகரிக்கும். உங்களை விட்டுச்சென்ற உடன்பிறப்புகள் மீண்டும் வந்திணைவர். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். அவர்களின் மேற்படிப்பு மற்றும் விவாகம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு நீங்கள் செய்த முயற்சி கைகூடும்.
குருவின் வக்ர காலம்
16.6.2021 முதல் 13.9.2021 வரை கும்ப ராசியில் குரு வக்ரம் பெறுகின்றார். பொதுவாகவே உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு குரு பகவான் பகை கிரகம் என்பதால், வக்ரம் பெறுவது நன்மைதான். அதிலும் குறிப்பாக 10-ம் இடத்தில் வக்ரம் பெறுவதால் தொழில் வெற்றிநடை போடும். கிளைத்தொழில் தொடங்கும் வாய்ப்புகள் கைகூடும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். விலகிச் சென்றவர்களுக்கு கூட மீண்டும் பணியில் சேர அழைப்புகள் வரலாம்.
14.9.2021 முதல் 13.10.2021 வரை மகர ராசியில் குரு வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் நீச்சம் பெறும் குரு வக்ரமடைவது நன்மைதான். பெற்றோர் வழியில் இருந்து வந்த விரோதங்கள் விலகும். அவர்கள்் உற்ற துணையாக இருந்து உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக்கொடுப்பர். கற்ற கல்விக்கேற்ற வேலை கிடைக்கும். கட்டிடப் பணியில் இருந்த தொய்வு அகலும். திட்டமிட்ட காரியங்களை செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். சொத்து சம்பந்தமான பஞ்சாயத்துக்கள் சுமுகமாக முடியும். சகோதரத்தின் உறவில் மட்டும் விரிசல்கள் ஏற்படலாம்.
சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை, மகரத்தில் சனி வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். யோகம் செய்யும் கிரகம் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. முன்னேற்றப் பாதையில் சென்ற தொழில் ஸ்தம்பித்து நிற்கலாம். முக ஸ்துதிக்காக பேசிய நண்பர்களை நம்பிச் செயல்பட்டு விரயங்களைக் காண்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை குறையலாம். உடல்நலச் சீர்கேடும், மருத்துவச் செலவுகளும் உண்டு. இக்காலத்தில் உத்தியோகத்தில் உள்ளவர்கள் மிகமிக கவனத்துடன் செயல்பட வேண்டும்.
செவ்வாய்-சனி பார்வைக் காலம்
மக்கள் அனைவரும் விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டிய நேரம் இது என்றாலும், உங்களைப் பொறுத்தவரை மிகமிக விழிப்புணர்ச்சி தேவைப்படும் நேரம். 14.4.2021 முதல் 3.6.2021 வரை மிதுன ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், மகர ராசியில் சஞ்சரிக்கும் சனியைப் பார்க்கின்றார். அதே சமயம் கும்பத்தில் சஞ்சரிக்கும் குரு செவ்வாயைப் பார்த்து புனிதப்படுத்துகின்றார். 4.6.2021 முதல் 21.7.2021 வரை கடகத்தில் சஞ்சரிக்கும் நீச்சம் பெற்ற செவ்வாய், மகரத்தில் சஞ்சரிக்கும் சனியை சப்தம பார்வையாகப் பார்க்கின்றார்.
இதுபோன்ற காலங்களில் ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். ‘வட்டி கட்ட முடியவில்லையே’ என்று வாங்கிய கடனுக்கு சொத்தை விற்க நேரிடலாம். துணிவும், தன்னம்பிக்கையும் குறையும். நிம்மதிக்காக ஆலயங்களை நோக்கி அடியெடுத்து வைக்க நேரிடும். வாழ்க்கைத் துணையோடும், உடன்பிறப்புகளோடும் அடிக்கடி சச்சரவுகள் வந்து கொண்டே இருக்கும். இக்காலத்தில் சனி கவசம் பாடி சனி பகவானை வழிபடுவது நல்லது.
வளர்ச்சி தரும் வழிபாடு
இந்தப் புத்தாண்டில் பொருளாதார விருத்தி அதிகரிக்க, தெற்கு நோக்கிய அம்பிகையை வழிபடலாம். அபிராமி அம்மன் வழிபாடு அனைத்து யோகங் களையும் கொடுக்கும்.
பெண்களுக்கான பலன்கள்
இந்தப் புத்தாண்டு உங்களுக்கு எல்லா வழிகளிலும் நற்பலன்களை கொடுக்கப் போகின்றது. வெளியேறி இருந்தவர்கள் வீடு நோக்கி வரும் வாய்ப்பு உருவாகும். கணவன்- மனைவிக்குள் உறவு பலப்படும். திட்டமிட்ட காரியங்களைச் செய்து முடிக்கும் விதத்தில் குருவின் பார்வை கைகொடுக்கின்றது. அஷ்டமத்துச் சனி விலகிவிட்டதால் உறவினர் பகை அகலும். தாய் மற்றும் சகோதரத்தின் ஆதரவு உண்டு. பிள்ளைகளின் கல்யாண முயற்சிகளும், கல்விக்காகச் செய்த முயற்சிகளும் கைகூடும். பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். உயர்பதவியும் தேடி வரும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.