1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

சிறுநீரகத்தில் கல் வர காரணம், அறிகுறிகள் மற்றும் கல் உருவாவதைத் தடுக்கக் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

 

சிறுநீரகத்தில் கல் வர  காரணம், அறிகுறிகள் மற்றும் கல் உருவாவதைத் தடுக்கக் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்


⭕⭕சிறுநீரகக் கல்

♦♦நாம் குடிக்கும் தண்ணீரிலும் சாப்பிடும் உணவிலும் கால்சியம், பாஸ்பேட், ஆக்சலேட், யூரியா என்று பல தாது உப்புகள் உள்ளன.

♦♦பொதுவாக உணவு செரிமானமான பிறகு, இவை எல்லாமே சிறுநீரில் வெளியேறிவிடும்.

சில சமயங்களில், இவற்றின் அளவு ரத்தத்தில் அதிகமாகும்போது, சிறுநீரில் வெளியேறுவதற்குச் சிரமப்படும்.

♦♦அப்போது சிறுநீரகம், சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப் பை ஆகிய இடங்களில் இந்த உப்புகள் படிகம்போல் படிந்து, கல் போலத் திரளும்.

♦♦சிறு கடுகு அளவில் ஆரம்பித்துப் பெரிய நெல்லிக்காய் அளவுக்கு வளர்ந்துவிடும். இதுதான் சிறுநீரகக் கல்.

♦♦இது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். வழக்கத்தில் பெண்களைவிட ஆண்களுக்கே இது அதிக அளவில் தோன்றுகிறது.

⭕⭕சிறுநீரக கல் உருவாக காரணங்கள்

♦♦சிறுநீரகக் கல் தோன்றுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும்.

♦♦குறிப்பிட்டுச் சொல்வதானால், அதிகமாக வெயிலில் அலைவது / வேலை பார்ப்பது, போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, உடலில் ஏற்படும் நீர் வறட்சி, தவறான உணவு முறைகள், உப்பு, மசாலா மிகுந்த உணவு வகைகளை அடிக்கடி சாப்பிடுவது, சிறுநீரகப் பாதையில் நோய் தொற்றுவது, உணவிலும் குடிநீரிலும் கால்சியம், குளோரைடு மிகுதியாக இருப்பது, சிறுநீர் கழிப்பதைத் தள்ளிப்போடுவது, பேராதைராய்டு ஹார்மோன் மிகையாகச் சுரப்பது, புராஸ்டேட் சுரப்பி வீக்கம், உடல் பருமன், பரம்பரை போன்றவை சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகின்றன.

♦♦உடலில் கால்சியம் அளவுகளைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் பாராதைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாமல் இருப்பது,உடல் உழைப்பே இல்லாமல் இருப்பது,கர்ப்பக் காலங்களில் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு அதிகமான தாதுஉப்புகள், உடலில் தேங்குதல்,உடல்பருமனாக இருப்பவர்களுக்கு, உடலில் சீரம் மற்றும் ஆக்ஸலேட் அளவுகள் அதிகமாக இருப்பது ஆகியவை சிறுநீரகக் கற்கள் உருவாகக்  காரணமாகின்றன.

⭕⭕கற்கள் என்ன செய்யும் ?

♦♦சிறுநீரகப் பாதையில் உருவாகும் கல் முதலில் சிறுநீர் ஓட்டத்தைத் தடை செய்யும்.

♦♦இதன் விளைவாக, சிறுநீரகத்திலோ, சிறுநீர்ப் பையிலோ சிறுநீர் தேங்கும்.

♦♦இது சிறுநீரகத்துக்குப் பின்னழுத்தத்தைக் கொடுக்கும். இதனால் சிறுநீரகம் வீங்கும்.

♦♦இதை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால், சிறுநீரகம் பழுதாகி, பின்னர் செயலிழந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

***

⭕⭕அறிகுறிகள்

*♦♦சிறுநீரகத்தில் கல் இருந்தால் ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் தோன்றாது. கல் நகரும்போதும், சிறுநீரகக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்போதும்

தான் வலி உண்டாகும்.*

♦♦முதுகில், விலா எலும்புகளுக்குக் கீழ் திடீரெனக் கடுமையாக வலி உண்டாகி, முன் வயிற்றுக்குப் பரவும்.

♦♦சிறுநீரகக் குழாயில் கல் இருந்தால், அடிவயிற்றில் வலி தோன்றி, பிறப்புறுப்புக்குப் பரவும். சிறுநீர்ப்பையில் கல் இருந்தால், தொப்புளுக்குக் கீழ் வலி தொடங்கி, சிறுநீர் வெளியேறும் புறவழித் துவாரம்வரை பரவும்.

♦♦இத்துடன், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வலி, ரத்தம் கலந்து வருதல், குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகளும் சேர்ந்துகொள்ளலாம்.

🟣🟣மீண்டும் சிறுநீரக கல் உருவாவதைத் தடுக்கக் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

⭕⭕வெயிலில் அலையாதீர்கள் !

♦♦பெரும்பாலும் வெயிலில் அலையும்போதும் வேலை செய்யும்போதும் உடலில் வெயில் தோற்றுவிக்கும் நீர் வறட்சிதான் சிறுநீரகக் கற்கள் உருவாகத் துணைபுரிகிறது.

♦♦எனவே, கோடையில் 2 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

♦♦பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. அவசியம் செல்ல வேண்டுமென்றால் குடையை எடுத்துச் செல்லுங்கள். முடிந்தவரை நிழலில் செல்வது நல்லது.


⭕⭕உப்பைக் குறைக்கவும் !

♦♦உணவில் உப்பைக் குறைக்க வேண்டும். ஒருவருக்குத் தினமும் 2.5 கிராம் உப்பு (சோடியம் குளோரைடு) போதும். சோடியம் அதிகமானால், அது சிறுநீரில் கால்சியத்தை அதிக அளவில் வெளியேற்றும். அப்போது கால்சியமானது ஆக்சலேட், பாஸ்பேட்டுடன் சேர்ந்து சிறுநீரகக் கற்களை உருவாக்கும். இதைத் தவிர்க்கவே உப்பைக் குறைக்க வேண்டும்

♦♦பதப்படுத்தப்பட்ட உணவு, விரைவு உணவு, பேக்கிங் சோடா கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் போன்றவற்றில் உப்பு அதிகமாக இருக்கும். இவற்றைத் தவிர்ப்பது நல்லது.


⭕⭕எதைச் சாப்பிடக் கூடாது?

♦♦சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய்,  உப்புக்கண்டம்,  பிஸ்தா, கேசரி பருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு,  சீஸ், சாஸ்,  ஆகியவைகளை தவிர்க்க வேண்டும்.மது மற்றும் புகையிலை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

♦♦காபி, தேநீர், பிளாக் டீ, கோலிசோடா போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

♦♦குளிர் பானங்கள், இதர மென்பானங்கள், ஐஸ்கிரீம், சாக்லேட் ஆகவே ஆகாது. இவற்றில் பாஸ்பேட் மிகுந்துள்ளது.

♦♦இதுபோல் உலர் பழங்கள், பாதாம்பருப்பு, முந்திரிப்பருப்பு, பீட்ரூட், சோயாபீன்ஸ், சேனைக் கிழங்கு, பசலைக் கீரையைச் சாப்பிட வேண்டாம். இவற்றில் ஆக்சலேட் மிகுந்துள்ளது.

♦♦உணவில் காரம், புளி, மசாலாவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

♦♦கேழ்வரகு, கீரைகள், கருணைக் கிழங்கு, வெள்ளைப் பூண்டு, முள்ளங்கி,  பால், பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகளான தயிர், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி, பால்கோவா, பால் அல்வா போன்ற உணவுகளைத் தவிருங்கள். இவற்றில் கால்சியம் அதிகம்.

♦♦இதுபோல், கால்சியம் மாத்திரைகளையும் சாப்பிடக் கூடாது.


⭕⭕தண்ணீர் அருந்துங்கள் !

♦♦வெப்பப் பிரதேசமான நம் நாட்டில் தினமும் மூன்றிலிருந்து ஐந்து லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம். (சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த ஆலோசனை பொருந்தாது. இவர்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் அளவுக்குத் தண்ணீர் குடித்தால் போதும்).

♦♦பாட்டில் மற்றும் பாக்கெட் தண்ணீரைவிட கொதிக்கக் காய்ச்சி, ஆறவைத்த தண்ணீர்தான் சுகாதாரமானது. அதிக அளவில் திரவ உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

♦♦அதிக அளவில் நீர் அருந்துவதும் திரவ உணவை அதிகப்படுத்துவதும் சிறுநீரகக் கல்லை வெளியேற்றும் இயற்கையான செயல்பாட்டை ஊக்குவிக்கின்றன.

⭕⭕எந்த உணவைச் சாப்பிட வேண்டும்?

♦♦சிறுநீரகக் கல் வந்துவிட்டால் திரவ உணவுகளான இளநீர், சிட்ரஸ் பழச்சாறுகள், வாழைத்தண்டுச் சாறு, பார்லி தண்ணீர், நீர்மோர் போன்றவற்றை அதிக அளவில் அருந்த வேண்டும்.

 ♦♦நார்ச்சத்து மிகுந்த கம்பு, சோளம், குதிரைவாலி, தினை, சாமை போன்ற சிறுதானிய உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

♦♦ஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யா, பேரீச்சை, இலந்தைப்பழம், சீத்தாப்பழம், வெள்ளரிக்காய், தர்ப்பூசணி, கிர்ணி, அன்னாசி போன்ற பழங்களையும், சுரைக்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய், சௌசௌ போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகளையும் முடக்கத்தான் கீரையையும் அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை சிறுநீரின் அமிலத் தன்மையைக் குறைக்கும். சிறுநீர்க் கழிப்பை அதிகப்படுத்தும்.

♦♦அப்போது சிறிய அளவில் உள்ள கற்கள் கரைந்து வெளியேறிவிடும், கல் உருவாவதும் தடுக்கப்படும்.

♦♦எலுமிச்சையில், பொட்டாசியம் சிட்ரேட் நிறைந்துள்ளது.  எலுமிச்சையை, தொடர்ந்து ஜூஸ் போன்ற ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தி வந்தால், சிறுநீரகக் கற்கள் உருவாகும் வாய்ப்பு குறையும்.

♦♦கேரட், பாகற்காய் போன்றவற்றைச் சாப்பிடுவது, சிறுநீரகக் கற்களைத் தடுக்கும்.

♦♦உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

**

⭕⭕வீட்டு வைத்தியம்

♦♦பார்லியை நன்கு வேக வைத்து நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும்.

♦♦வாரத்தில் ஒருமுறை இதை செய்யலாம். அகத்தி கீரையுடன் உப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து, அந்த நீரை அருந்தலாம்.

♦♦முள்ளங்கி சாறு 30 மிலி அளவு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும். சிறுநீர் நன்றாக பிரியும்.

♦♦வெள்ளரி, வாழைப்பூ, வாழைத்தண்டு, ஆகியவைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

வெள்ளரிப்பிஞ்சு, நீராகாரம் சிறுநீரக பிரச்னைகளுக்கு அருமருந்து.

♦♦பரங்கிக்காய் சிறுநீர் பெருக்கி. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

♦♦புதினாக் கீரையை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் பலப்படும்.

⚡ ஹெல்த் டிப்ஸ்⚡

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags