விருதுநகர் மாவட்டம், நாரணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி கணிதப் பட்டதாரி ஆசிரியர் கருணைதாஸ் சர்வதேச அளவில் மைக்ரோசாஃப்ட்டின் சிறந்த கல்வியாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தகவல் தொழில்நுட்பம் மூலம் சிறந்த முறையில் கற்பிக்க, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பல இலவச மென்பொருட்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த மென்பொருட்களை ஆசிரியர்கள் கற்கவும் தங்கள் கற்பித்தலை மாணவர்களுக்கு எடுத்துச் செல்லவும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் Microsoft Education Community என்ற முன்னெடுப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் உலக அளவில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் தங்களின் தகவல் தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்திக் கொள்ளவும் முடியும்.
இத்தளத்தில் ஆசிரியர்கள் தங்களின் மைக்ரோசாஃப்ட் இ-மெயில் முகவரியுடன் இலவசமாக இணைந்து கொள்ளலாம். அதில் பல்வேறு வகையான பாடங்களை இணையம் மூலமாகவே கற்றுச் சான்றிதழ்கள், புள்ளிகளைப் பெறலாம். இதில் அதிகச் சான்றிதழ்கள் மற்றும் புள்ளிகள் பெறும் ஆசிரியர்களுக்கு மைக்ரோசாஃப்ட் பயிற்சியாளர் சான்றிதழும் வழங்குகிறது.
மேலும் ஆண்டுதோறும் சிறப்பாகச் செயல்படும் ஆசிரியர்களை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மைக்ரோசாஃப்ட் கல்வியாளர்களாகத் தேர்வு செய்கிறது. மைக்ரோசாஃப்ட் கல்வியாளர்களில் சிறப்பாகச் செயல்படும் சிலரை, உலக அளவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சிறந்த கல்வியாளராகத் தேர்வு செய்கிறது. அந்த வகையில் இம்முறை அரசுப் பள்ளி ஆசிரியர் கருணைதாஸ் சிறந்த மைக்ரோசாஃப்ட் கல்வியாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆசிரியர் கருணைதாஸ் வகுப்பறையில் தகவல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்குப் பாடங்களைக் கற்பித்து வருகிறார். கரோனா காலத்தில் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையில் தகவல் தொழில்நுட்பம் மூலம் மாணவர்களுக்குப் பாடங்களை நடத்தி வருகிறார்.
மைக்ரோசாஃப்ட் மென்பொருட்கள் (டீம்ஸ்) மூலம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரிப் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குத் தகவல் தொழில்நுட்பப் பயிற்சியினை வழங்கியுள்ளார். மாணவர்களை இணையதளம் மூலமாக எளிதில் மதிப்பீடு செய்ய Kahoot என்ற மென்பொருளைப் பயன்படுத்தி மதிப்பீடு செய்து மாணவர்களிடம் கற்றல் ஆர்வத்தினை ஏற்படுத்தி வருகிறார்.
மேலும், தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு இலவசமாக மைக்ரோசாஃப்ட் கற்றல்- கற்பித்தல் மென்பொருட்களைக் கற்பித்து வருகிறார். இதனால் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்த ஆண்டு உலக அளவில் சிறந்த மைக்ரோசாஃப்ட் கல்வியாளராக ஆசிரியர் கருணைதாஸைத் தேர்வு செய்துள்ளது. அதேபோல நாரணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தால் சிறந்த பள்ளியாகத் ( Microsoft Showcase School) தேர்வு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.