சனிப்பெயர்ச்சி பலன்! கும்பம்
அவிட்டம் 3, 4ம் பாதம் : ஏழரை நாட்டுச் சனியின் பிடிக்குள் வரவிருக்கும் உங்களுக்கு துவக்கத்தில் பய உணர்வு தோன்றுவதில் வியப்பேதும் இல்லை. சனி என்ற சொல்லைக் கேட்டாலே எல்லோருக்கும் வயிற்றில் புளியைக் கரைக்கும். இதில் நெடுநாளைக்குப் பிறகு சனியின் தாக்கத்தினை அனுபவிக்க நேரும் போது மனதில் ஒருவித சஞ்சலம் உண்டாகும் என்பது உண்மையே. கடந்த மூன்று ஆண்டு காலமாக பதினொன்றாம் இடமாகிய லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து பலவிதமான சவுகர்யங்களையும் ஏற்படுத்தித்தந்த சனி பகவான் தற்பொழுது விரய ஸ்தானம் ஆகிய 12ம் இடத்தில் வந்து அமர்வது சாதகமான அம்சம் அல்ல. ஏழரை சனியின் துவக்கத்தினைக் காணும் உங்களுக்கு காரியத் தடைகள், மனக் குழப்பங்கள், பலவிதமான இன்னல்கள், இடம் விட்டு இடம் மாறுதல் போன்ற சிரமங்கள் தோன்றக்கூடும்.
நிதி : சனி பகவானின் நேரடிப் பார்வை ஆறாம் இடத்தின் மீது விழுகிறது. அடுத்தவர்களுக்காக நீங்கள் கடன்படும் சூழல் உருவாகக் கூடும். அடுத்தவர்களை நம்பி ஜாமின் பொறுப்பேற்றல், கியாரண்டி கையெழுத்திடுதல் போன்றவைகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். வழக்குகள், கடன் சம்பந்தப்பட்ட விவகாரங்கள், உங்களை எதிரியாக மனதில் நினைப்பவர்கள் ஆகிய விஷயங்களில் அலட்சியமாக இருந்து விடாதீர்கள். எதிரிகள் வலுப்பெறும் வாய்ப்புள்ளதால் எச்சரிக்கை தேவை.
குடும்பம் : கட்டுப்பாடற்ற பேச்சுக்களால் குடும்பத்தில் பிரச்னைகள் தலையெடுக்கக் கூடும். தேவையற்ற வாக்குறுதிகளால் பொருளிழப்பு தோன்றும் வாய்ப்பு உண்டென்பதால் நிதானித்துப் பேசுவது நல்லது. கூட்டுக் குடும்பத்தில் உண்டாகும் சிறு சிறு பிரச்னைகளில் நீங்கள் அதிகம் தலையிடாமல் இருப்பது நல்லது. உங்களின் தலையீட்டினால் பிரச்னை பெரிதாகி குடும்பம் பிரிவதற்கான வாய்ப்புண்டு. பாகப்பிரிவினை போன்ற விஷயங்களில் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
கல்வி : மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். முக்கியமாக குருவுடன் சனி இணைந்து 12ல் அமர்வதால் தேர்வு நேரத்தில் எழுதும் வேகம் குறையக் கூடும். இதனைத் தவிர்க்க அன்றாடம் பாடங்களை எழுதிப் பார்ப்பதும், தேர்விற்கு முன்னால் நிறைய மாதிரித்தேர்வுகளை எழுதிப் பார்ப்பதும் நல்லது. தனிமையில் இருக்கும்போது தேவையற்ற சிந்தனைகள் உங்களது கவனத்தை பாடத்தில் கொண்டு செல்லாது என்பதால் முடிந்த வரை தனிமையைத் தவிர்த்து நண்பர்களோடு இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவது நன்மை தரும்.
பெண்கள் : வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. அவருடைய தேவையை அறிந்து நீங்கள் தான் அவருடைய பணிகளுக்குத் துணை நிற்க வேண்டியிருக்கும். பிள்ளைகளின் நடவடிக்கையில் கவனம் தேவை. பிறந்த வீட்டுப் பெருமையை புகுந்த வீட்டில் பேசாமல் இருப்பது நல்லது.
உடல்நிலை : வயிறு சார்ந்த பிரச்னைகள் சற்று சிரமத்தினைத் தரக்கூடும் என்பதில் உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. ரோக ஸ்தானத்தின் மீது ராசிநாதன் சனியின் நேரடிப் பார்வை விழுவதால் பெரிதாக கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. உணவினில் நல்லெண்ணெய் சேர்த்துக்கொள்வது நன்மை தரும். நீண்ட நாட்களாக அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக காத்திருப்போருக்கு சாதகமான நேரமாக அமையும்.
தொழில் : தொழில் ரீதியாக சனி பாதகமான சூழ்நிலையில் இருப்பதால் பெருத்த முன்னேற்றத்தைக் காண இயலாது. வியாபாரிகள் புதிய முயற்சியில் ஈடுபடும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். ஷேர் மார்க்கெட், புரோக்கர், கமிஷன் ஏஜன்சி தொழிலில் உள்ளவர்கள் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நேரம் இது. உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் கருத்து வேறுபாடு கொள்ளும் வாய்ப்பு உண்டென்பதால் கவனத்துடன் இருக்க வேண்டும். முக்கியமாக வரவிருக்கும் மூன்று ஆண்டு காலத்திற்குள் லாபம் கிடைக்கும் என ஆசைப்பட்டு ஏற்கெனவே இருக்கும் சொத்துக்களை விற்க முயற்சிக்காதீர்கள். லாபம் கிடைக்காவிட்டாலும் நஷ்டம் உண்டாகாமல் காத்துக்கொள்ளும் நேரம் இது. ஏழரை சனியைப் பற்றிக் கவலை கொள்ளாது கடமையைச் செய்து வாருங்கள். நன்மை உண்டாகும்.
பரிகாரம் : துர்கா தேவியை வணங்குங்கள். செவ்வாய், சனிக்கிழமைகளில் ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்யுங்கள்.
சதயம்: ஜென்ம ராசிக்கு அதிபதி ஆகிய சனி பகவான் 12ல் சென்று அமர்வதால் சுகமான வாழ்வியல் நிலைக்கு சற்று சோதனைகள் உண்டாகும். வீடு, வண்டி, வாகனம், மனை போன்ற சொத்துக்கள் சொந்தமாக இருந்தாலும் அதனை சரியான நேரத்திற்கு அனுபவிக்க இயலாத சூழல் உண்டாகும். நமது அவசரத் தேவைக்கு வண்டி, வாகனங்கள் துணை புரியாது போவதால் மனதில் ஒருவித விரக்தி உருவாகும். சனி பகவானின் சிறப்புப் பார்வை உங்களின் வாக்கு ஸ்தானத்தின் மீது விழுகிறது. பேசும் வார்த்தைகளால் அடிக்கடி சிரமத்தினைக் காண நேரிடும். இடம், பொருள், ஏவல் அறிந்து பேசுவது அவசியம். உங்கள் வார்த்தைகளில் வெளிப்படும் கருத்துக்கள் அடுத்தவர்களின் பார்வையில் தவறாகப் பொருள் காணப்படலாம்.
நிதி : பொருளாதார சூழ்நிலையில் ஏற்ற இறக்கத்தினைக் கண்டு வருவீர்கள். வரவிற்கும், செலவிற்கும் சரியாக இருந்து வரும். ஒரு சிலருக்கு கையிருப்பு கரையும் வாய்ப்புண்டு. முன்பின் தெரியாத நபர்களிடம் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ள வேண்டியது அவசியம். முக்கியமாக தனலாபாதிபதி குருவின் 12ம் இடத்துச் சஞ்சாரம் பண விவகாரங்களில் உங்களை நிதானித்து செயல்பட வேண்டிய சூழலை அறிவுறுத்துகிறது. அடுத்தவர்களுக்காக கடன் வாங்குதல், ஜாமின் பொறுப்பேற்றுக் கொள்ளுதல் போன்ற காரியங்களில் நிச்சயமாக ஈடுபடக்கூடாது.
குடும்பம் : குடும்பத்தில் அமைதி நிலவும். உடன்பிறந்த சகோதரனால் சில தர்மசங்கடங்களை சந்திக்க நேரிடும் அதே நேரத்தில் சகோதரியின் மூலம் நன்மை நடக்கக் காண்பீர்கள். நெருங்கிய உறவினர் ஒருவருக்கு உதவி செய்ய இயலாத சூழல் உருவாகக்கூடும். இதனால் உறவினர்கள் மத்தியில் அவப்பெயர் உருவாகலாம். உங்களை வைத்து ஆதாயம் தேடிய நபர்கள், நீங்கள் செய்த உதவியை மறந்து போவார்கள். காரியம் முடிந்ததும் அலட்சியப்படுத்தப்படுவதை எண்ணி வருத்தம் கொள்ள நேரிடும்.
கல்வி : மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். தேர்வு நேரத்தில் நிலவும் கிரக நிலை உங்கள் எழுத்தின் வேகத்தினைக் குறைக்கக்கூடும். ஒரே கேள்விக்கு இருவேறு பதில்களை நினைத்து குழம்பும் சூழலும் உருவாகலாம். இதனைத் தவிர்க்க தேர்விற்கு முன்னால் நிறைய மாதிரித் தேர்வுகளை எழுதி சரிபார்ப்பது நல்லது. முடிந்த வரை தனிமையைத் தவிர்த்து நண்பர்களோடு இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவது நன்மை தரும். பொறியியல், பொறியியல் சார்ந்த அனைத்துத் துறை மாணவர்களும் ஏற்றம் காண்பார்கள்.
பெண்கள் : குடும்பப் பொறுப்புகள் அதிகரிப்பதால் ஓய்வற்ற சூழலை உணர்வீர்கள். அதிகம் பேசாது அமைதி காக்க வேண்டியது அவசியம். வாழ்க்கைத்துணையின் உடல்நிலையையும், மன நிலையையும் அதிக அக்கறையுடன் கவனித்துக்கொள்ள வேண்டிய காலக்கட்டத்தில் உள்ளீர்கள். வேலை பளுவோடு குடும்பப் பொறுப்புகளும் அதிகரிக்கும். எல்லாவற்றையும் சமாளிக்கும் திறன் கொண்டவர் என்பதால் சோதனைகளுக்கு உட்பட்டு உங்களைப் பக்குவப்படுத்திக் கொள்ளும் காலமாக அமைந்துள்ளது.
உடல்நிலை: எலும்பு முறிவு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை சந்திக்கும் வாய்ப்பு உண்டென்பதால் வண்டி, வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது எச்சரிக்கை தேவை. அளவுக்கதிகமான டென்ஷனாலும், ஓய்வில்லாமல் செயல்பட்டு வருவதாலும் உடல்நிலையில் ரமத்தினைக் காண நேரிடலாம். தியானம், யோகா போன்ற பயிற்சிகளால் உடல்நிலையை சீராக வைத்திருக்க முயற்சிக்கவும். தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளை உடனுக்குடன் கவனித்துக் கொள்வது அவசியம்.
தொழில் : தொழில் ரீதியாக பெருத்த முன்னேற்றத்தைக் காண இயலாது. உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் மட்டுமல்லாது உடன் பணிபுரிவோருடனும் கருத்து வேறுபாடு கொள்ளும் வாய்ப்பு உண்டு. அடுத்தவர் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க நேரலாம். வியாபாரிகள் புதிய முயற்சியில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். ஷேர் மார்க்கெட், கமிஷன் ஏஜன்சி தொழிலில் உள்ளவர்கள் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நேரம் இது. தொழிற்சாலைப் பணியாளர்கள் இயந்திரங்களில் பணியாற்றும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். காவல், இராணுவத்தினர் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். பொதுவாக இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு சிறிது சோதனைக் காலமாக அமையலாம். சோதனைகளை சாதனைகளாக மாற்றிக் கொள்ளும் திறம் மிக்கவர்கள் நீங்கள் என்பதால் தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் செயல்பட்டு வாருங்கள். நன்மை உண்டாகும்.
பரிகாரம் : பிரத்யங்கிரா தேவியை வழிபட்டு வாருங்கள். வெள்ளி தோறும் கோபூஜை செய்து வணங்கி வருவதும் நன்மை தரும்.
பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்: பொதுவாக உங்கள் ராசிக்கு சனி பகவான் 12ம் இடத்தில் சஞ்சரிக்கும்போது சற்று தைரியக் குறைவு உண்டாகலாம். குரு பகவானே உங்கள் நட்சத்திர அதிபதி என்பதாலும் குருவும், சனியும் இணைந்து 12ல் சஞ்சரிக்க உள்ளதாலும் முக்கியமான நேரத்தில் அநாவசிய பயத்தின் காரணமாக முன் வைத்த காலை பின்வாங்கும் எண்ணம் உருவாகும். இதனால் ஒரு சில விஷயங்களில் பொருளிழப்பினைக் காண நேரிடலாம். எந்தக் காரியத்தில் இறங்கும்போதும் இது நடக்குமா, நடக்காதா., இதனால் வேறு வகையில் தொல்லை உண்டாகுமா என்றெல்லாம் தேவையற்ற பயம் கொண்டு சரியான நேரத்தில் செயலில் இறங்காமல் காலம் தாழ்த்துவதால் தேடி வந்த வாய்ப்பு விலகிச் செல்லக்கூடும்.
நிதி : தனாதிபதி குருவும் 12ல் அமர்தால் 2021 நவம்பர் வரை சீரான வருமானமே இருந்து வரும். அதுவும் உழைப்பின் பலனாகத்தான் இருக்குமே தவிர அதிர்ஷ்டத்தினாலோ அல்லது வேறு மார்க்கத்தினாலோ இருக்காது. சேமிப்பில் தேக்க நிலையை உணர்வீர்கள். சுபசெலவுகள் கூடுவதால் வீட்டினில் சுபநிகழ்ச்சிகளின் மூலமாக பணம் விரயமாகும் வாய்ப்பு உண்டு. கடன் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை.
குடும்பம் : வாழ்க்கைத்துணையுடன் அவ்வப்போது கருத்து வேறுபாடு கொண்டாலும் குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை நிலவி வரும். முன்னோர்களின் சொத்துக்களில் பாகப்பிரிவினைக்கான வாய்ப்புகள் உண்டு. சொத்து விஷயத்தில் உடன்பிறந்தோர் உங்களோடு ஒத்துப்போவார்கள். பிள்ளைகளின் செயல்களில் உள்ள வேகத்தினைக் கண்டு மிகவும் பெருமிதம் கொள்வீர்கள். மனதிற்குள் கொடி கட்டிப் பறக்கும் அவர்களின் எதிர்காலம் பற்றிய கற்பனையை நிஜமாக்க முடியவில்லையே என மனம் வருந்துவீர்கள்.
கல்வி : மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். நேர்மையான வழியில் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டீர்களேயானால் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவது நிச்சயம். சட்டம் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர் பயிற்சி, அக்கவுண்டன்சி, காமர்ஸ், கணிதம் பயிலும் மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.
பெண்கள் : நினைத்ததை உடனுக்குடன் சாதிக்க நினைத்து வேகமாக செயல்படுவீர்கள். பெரியவர்கள் சொல்லும் ஆலோசனைகளைக் காது கொடுத்துக் கேட்காமல் உடனடியாக காரியத்தில் இறங்குவதால் வருத்தமே மிஞ்சும். வீட்டினில் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கொள்வீர்கள். நீங்கள் எண்ணிய செயல்கள் 2022ம் ஆண்டின் முற்பாதியில் நிறைவேறும். கணவரின் ஆலோசனைப்படி நடப்பது நன்மை தரும்
உடல்நிலை : உடல்நிலையில் அசதி உண்டாகும். 2021 மே மாதத்திற்குப் பிறகு வாயுப்பிடிப்பு, அலர்ஜி. தொற்றுவியாதிகளுக்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளது. உடம்பில் தோன்றும் அலர்ஜிக்கான அறிகுறிகளை உடனுக்குடன் கவனிப்பது நல்லது. ஒரு சிலர் குறட்டை தொந்தரவால் அவதிப்படுவார்கள்.
தொழில் : விரய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் சனி பகவான் தொழில் ரீதியாக நீங்கள் வேகமாக செயல்படுவதற்கு தடைக்கற்களை உண்டாக்குவதோடு அதிகப்படியான அலைச்சலுக்கும் ஆளாக்குவார். ஆயினும் ராசிநாதன் சனியே என்பதாலும் சனியுடன் குரு இணைவதாலும் அலுவலகத்தில் உங்கள் கடமையைச் சரியாக செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகளிடம் நற்பெயரைக் காண போராட வேண்டியிருக்கும். பல் மருத்துவர்கள், எலும்புமுறிவு மருத்துவர்கள், சாப்ட்வேர் துறையைச் சேர்ந்தவர்கள் சிறப்பான நிலை அடைவர். சமையல் கலைஞர்கள் வாழ்வினில் தங்களது தரத்தினை உயர்த்திக்கொள்வார்கள். தொழிலதிபர்கள் சற்று நிதானித்துச் செயல்பட வேண்டியிருக்கும். தொழிலாளர் பிரச்னைகளை சமாளிப்பதில் சற்று சிரமம் காண்பீர்கள்.
பரிகாரம் : மாதந்தோறும் ஜென்ம நட்சத்திரத்தன்று நரசிம்மரை வழிபடுங்கள். சனிக்கிழமைகளில் மாற்றுத்திறனாளி, ஏழை ஒருவருக்கு அன்னதானம் செய்யுங்கள்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.