ஐஏஎஸ் தேர்வில் நன்கு படிப்பவர்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்று கிடையாது. யார் வேண்டுமானாலும் வெற்றிபெறலாம் என்று அத்தேர்வில் தேர்ச்சி பெற்ற நாகை மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் காவலரின் மகள் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிபவர் அமுதா. இவரின் மகள் சரண்யா கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற அகில இந்தியக் குடிமையியல் தேர்வில் அகில இந்திய அளவில் 36-வது இடம் பிடித்துத் தேர்ச்சி பெற்றுள்ளார்.
நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம் இன்று சரண்யா மற்றும் தலைமைக் காவலர் அமுதா ஆகியோரை மாவட்டக் காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பூங்கொத்து மற்றும் நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினார். அப்போது, பணியின் போது ஏழை, எளிய மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்குச் சிறப்பான சேவையாற்ற வேண்டும் என்று செல்வநாகரத்தினம் சரண்யாவுக்கு அறிவுறுத்தினார்.
தன்னுடைய கற்றல் அனுபவம் குறித்து சரண்யா 'இந்து தமிழ் திசை' இணையதளத்திடம் பகிர்ந்து கொண்டார்.
''நல்லாப் படிக்கிறவங்கதான் இதை சாதிக்கணும்னு இல்லை. யாராயிருந்தாலும் சாதிக்க முடியும். ஒரே விஷயத்தில் தொடர்ச்சியாகக் கவனம் செலுத்தினாலே எந்த விஷயமும் வெற்றியைத் தேடித் தரும். என்னையே எடுத்துக்கிட்டீங்கன்னா ஒருமுறை, இருமுறை அல்ல தொடர்ச்சியா நான்கு முறை முயற்சி செய்து 4-வது முறைதான் வெற்றி பெற்றிருக்கிறேன்.
ஆனால் ஒவ்வொரு முறையும் அதற்கு முந்தைய முறையை விட தேர்வில் அதிக முன்னேற்றத்தைச் சந்தித்திருந்தேன். அதுதான் தொடர்ந்து என்னை முயற்சிக்க வைத்தது. ஆனால் ஒரே விஷயத்துக்காகத் தொடர்ந்து கவனத்தை செலுத்தியது என்னுள் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்தது. எதை எப்படி அணுகவேண்டும் என்கிற அனுபவ அறிவைத் தந்திருக்கிறது.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அழைத்துப் பாராட்டியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் இருந்தது. அவரும் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். என்னைவிட என் குடும்பம் இதில் அதிக மகிழ்ச்சியாக இருக்கிறது. சந்திக்க வேண்டியதும், சாதிக்க வேண்டியதும் இனிமேல்தான் இருக்கிறது. சந்திப்பேன், சாதிப்பேன்'' என்றார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.