வானில் அவ்வப்போது ஏற்படும் அபூர்வ நிகழ்வுகளை மாணவர்கள் மற்றும் வானியல் ஆராய்ச்சியாளர்கள் பார்த்து பல்வேறு தகவல்களை தெரிந்துகொள்கின்றனர். இந்த ஆண்டின் கடைசி முழு சூரிய கிரகணம் நேற்று நிகழ்ந்தது. அதை அர்ஜென்டினா, சிலி மற்றும் பசிபிக் கடல் பகுதிகளில்தான் காணமுடிந்தது. இதை தொடர்ந்து, வருகிற 21-ந்தேதி மற்றொரு அதிசய நிகழ்வாக வியாழன் மற்றும் சனி கோள்கள் நெருங்கி ஒரே கோளாக காட்சி அளிக்க இருக்கின்றன. இது வானியல் விஞ்ஞானிகளையும், மாணவர்களையும் அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி உள்ளது.
இதுகுறித்து சென்னை பிர்லா கோளரங்க இயக்குனரும், விஞ்ஞானியுமான எஸ்.சவுந்தரராஜன் கூறியதாவது:-
வாயு பெருங்கோள்களான சனியும் வியாழனும் தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக வானில் மேற்கு திசையில் காட்சி அளித்து வருகின்றன. தற்போது இந்த 2 கோள்களும் நாளுக்கு நாள் நெருங்கி வந்துகொண்டே இருக்கின்றன. வருகிற 21-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 6 மணி அளவில் மேற்கு வானத்தில் அவற்றுக்கு இடைப்பட்ட கோணம் ஒரு டிகிரியில் பத்தில் ஒரு பங்காக குறைந்து இரண்டு கோள்களும் நம்முடைய கண்களுக்கு நேர்கோட்டில் வருவதால் அவை ஒரே கோளாக காட்சி அளிக்க இருக்கின்றன. இதனை வெறும் கண்ணால் அனைவரும் பார்க்கலாம். இந்த அபூர்வ நிகழ்வால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
பொதுவாக வியாழன் கோள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், சனி கோள் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் வேறுபட்ட வேகத்தில் சூரியனை சுற்றி வருகின்றன. பூமியில் இருந்து வியாழன் கோள் 88.6 கோடி கிலோமீட்டர் தூரத்திலும், சனி கோள் 162 கோடி கிலோமீட்டர் தரத்திலும் தற்போது உள்ளன. இந்த இரண்டு கோள்களும் ஒரே புள்ளியாக தோன்றினாலும், அவற்றுக்கு இடைப்பட்ட தூரம் 73 கோடி கிலோமீட்டர் ஆகும்.
சனி கோளும், வியாழன் கோளும் 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை அருகருகே நெருங்கிவரும் என்றாலும், இதேபோன்று மிக நெருக்கத்தில் வந்தது கடந்த 1623-ம் ஆண்டு அதாவது 397 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்து உள்ளது. அதற்கு பிறகு மீண்டும் வருகிற 2080-ம் ஆண்டு மார்ச் 15-ந்தேதிதான் வருகின்றன.
இதற்கு முன்பு 2000-ம் ஆண்டு மே 28-ந்தேதி அவை அருகருகே வந்தன. ஆனால் அப்போது பகல் பொழுதில் சூரியனின் அருகில் இருந்து காட்சியளித்ததால் நம்மால் அவற்றை பார்க்க முடியவில்லை. தற்போது இந்த ஆண்டு டிசம்பர் 21-ந்தேதி இதை நாம் காண இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.